பக்கம் : 754
 

     ஒற்றன் கூறியதுகேட்ட சடிவேந்தன், அருக்ககீர்த்தி முதலியோரை அழைத்து,
அவர்க்கு ஒற்றன் உரைத்த செய்தியை உரைத்தான் என்க.
 

( 58 )

பலரும் பலவாறு கூறல்

1189. விச்சையின் செருக்கி னாலும் வீங்குதோட் டருக்கி னாலுங்
கச்சையங் களிற்றோ டேனைக் கவனமா வலத்தி னாலு
மச்சுவக் கிரீவ னாதி யரசர்க ளழன்று வெம்போர்
நச்சிமேல் வருப வாயி னன்றது போல்வ துண்டோ.
 
     இது முதல் 7 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) அச்சுவக்கிரீவன் ஆதி அரசர்கள் - அச்சுவகண்டன் முதலிய
உத்தரசேடிக்கண் உள்ள மன்னர்கள், விச்சையின் செருக்கினாலும், தாம் பயின்றுள்ள
வித்தை மிகுதியால் உண்டாகிய மதத்தாலும், வீங்குதோள் தருக்கினாலும் - தம் பருத்த
தோள்வலிமையாலாகிய மதத்தாலும், கச்சை அங்களிற்றோடு ஏனைக் கவனமா
வலத்தினாலும் - கச்சையென்னும் கயிற்றையுடைய யானைப் படையினோடே, மற்றைய
குதிரைப் படைப் பெருக்கத்தின் வலிமையுண்மையாலும், அழன்று - நம்மைச் சினந்து,
வெம்போர் நச்சி - நம்மொடு வெவ்விய போர் ஆற்றுதலை விழைந்து, மேல் வருப ஆயில்
- போர்மேற்கொண்டு வருவாராயின், அதுபோல்வது நன்று உண்டோ - நமக்கு அதைப்
போன்ற நன்மை வேறியாதுளது? (எ - று.)

அச்சுவகண்டன் முதலிய அரசர்கள், தம் செருக்காலும், படை வலத்தாலும், தருக்குற்றுச்
சினந்து, நம்மேல் போர் ஆற்ற வருவாராயின், அது நமக்கு மிக நன்மையே ஆம்; என்றார்
 என்க. அவர்பால் நாமே வலிந்து போர்க்குப் போதல் வேண்டும்; அங்ஙனம் யாம்
போகாமலிருப்ப அவரே வருவராயின், அது நன்மையே என்றபடி.
 

( 59 )

 

1190. எரியெனச் சுரிந்த கேசத் திருளெனத் திரண்ட மேனிப்
1பெரியன வளைந்த வெள்ளை யெயிற்றினர் பிலங்கொள் 2வாய
ரரியன 3செய்ப வன்றே யசுரரென் 4றுருவங் கொண்டே
யிரிவன ரோடு வாரு ணம்மையு மெண்ணிற் றென்பார்.
 
     (இ - ள்.) எரி எனச் சுரிந்தகேசத்து - தீப்பிழம்பை ஒத்துச் சுருண்டுள்ள
தலைமயிரையும், இருள் எனத் திரண்ட மேனி - இருளைப்போன்ற பரிய உடலையும்
பெரியன - மிகப் பெரியனவாக, வளைந்த வெள்ளை எயிற்றினர் - வளைவுடைய வெள்ளிய
பற்களையும், பிலங்கொள் வாயர் - மலைக்குகை போன்ற வாயையும் உடையராய், அரியன
செய்ப அன்றோ - செயற்கருஞ்செயலைச் செய்வதற்குரியர், என்றே - என்று எண்ணுமாறு,
அசுரர் உருவங்கொண்டே - அசுர உடலைப் பெற்று வைத்தேயும், இரிவனர் ஓடுவாருள் -
போர்க்களத்தே நாணாது புறமிட்டோடுவர் சிலருள், நம்மையும் எண்ணிற்று - நம்மையும்
சேர்த்து எண்ணியதோர் எண்ணம் போலும், (எ - று.)
 

 


     (பாடம்) 1 பெரியவன். 2 பேழ்வாய். 3 சூழ்ப. 4 றுருவு கண்டே.