பக்கம் : 757
 

     ஆராது - உண்ணாது, காதலர் மார்பிலே விருப்பத்தோடே பாய்ந்து மூழ்கும் மகளிர்
கண்போல் பகைவர் மார்பிடத்தே மூழ்கும் நம் மறவாள், நம் மருங்கிற் கட்டுண்டு ஊண்
பெறாது பசித்துக் கனல்ப, இன்று விஞ்சையர் குருதியை நன்கு பருகிப் பசிதணியும் என்றார்
என்க.
 

( 63 )

 

1194. ஆள்வரை யனைய தானை யச்சுவக் கிரீவ னென்னு
நீள்வரை 1மருங்கி னின்ற 2திருவெனு மருவி நீத்தந்
தாள்வரை யிழிந்து வந்து தகைமணி நீல வண்ணன்
வாள்வரை யகல மென்னுங் கருங்கடன் மடுக்கு மன்றே.
 
     (இ - ள்.) ஆள்வரை அனைய தானை - தன்னால் ஆளப்படுகின்ற மலைகளை ஒத்த
யானைப் படையையுடைய, அச்சுவக்கிரீவன் என்னும் - அச்சுவகண்டன் என்று
கூறப்படுகின்ற, நீள்வரை மருங்கின் நின்ற - நீண்டமலையின்கண் நிலைத்துநின்ற, திருஎனும்
அருவிநீத்தம் - செல்வம் என்னும் அருவியையுடைய நீர்வெள்ளம், தாள்வரை யிழிந்துவந்து
- அம்மலையின் அடி வழியே இறங்கி ஓடிவந்து, தகைமணி நீலவண்ணன் -
தகுதியையுடைய நீலமணி வண்ணனாகிய திவிட்டன் என்னும், வாள்வரை - ஒளிமிக்க வரை
போலும், அகலம் என்னும் - மார்பு என்று கூறப்படும், கருங்கடல் மடுக்கும் அன்றே -
கரிய கடலின் அகத்தே நிறையும்: அன்றே: அசை, (எ - று.)

வரையனைய தானை என்னும் உவமையால் யானைத்தானை என்க. அச்சுவகண்டன்
என்னும் மலையிடைநின்ற திரு என்னும் அருவி அதன் தாள்வழியே இழிந்து
திவிட்டநம்பியின் அகலம் என்னும் கடலிலே கலக்கும் என்றார் என்க. தாள் - முயற்சி,
அடி என்னும் பொருள் ஆகலின் அச்சுவகண்டன் தாள் என்றது - அச்சுவகண்டன்
முயற்சியாலே என்றும் அச்சுவகண்டன் என்னும் மலையின் அடி வழியாக என்றும்
பொருள்படல் காண்க.
 

( 64 )

 

1195. ஆதலா லதனு ணாமு மயிற்படைப் புணைகள் பற்றி
3யேதிலா மன்ன ரென்னு மிருமரக் கடப்பு வாரி
மீதுலாம் வெகுளி யென்னும் வெவ்வழன் முழங்க மாட்டிக்
காதலார் 4கண்கள் பூப்பக் காய்த்துதுங் 4கைகோளென்பார்.
    

 


     (பாடம்) 1மருங்கிற் றாழ்ந்த. 2 திருவென்னும். 3 யேதில. 4 கணங்கள்.
4 கைகொள்.