பக்கம் : 758
 

     (இ - ள்.) ஆதலால் அவ்வாறாதலின், நாமும் - யாம் அனைவரும், அதனுள் -
அவ்வெள்ளத்தூடே, அயிற்படைப்புணைகள் பற்றி - வேல்என்னும் தெப்பங்களைப்
பற்றுக்கோடாகக்கொண்டு, ஏதிலாமன்னர் என்னும் - பகையரசர்கள் என்னும்,
இருமரக்கடப்பு வாரி - பெரிய மரங்களாகிய தடையைப் பறித்தொழித்து,
அம்மரங்களைக்கொணர்ந்து, மீதுலாம் வெகுளி என்னும் - மிகைப்பட்டு ஓங்குகின்ற சினம்
என்று கூறப்படுகின்ற, வெவ்வழல் - வெவ்விய நெருப்பை, முழங்கமாட்டி - ஒலிக்குமாறு
கொளுவி, காதலார் கண்கள் பூப்ப - நம்பால் அன்புடையார் கண்கள் மலரும்படி,
காய்த்துதும் - அத்தீயில் நம்முடல்களைக் காய்த்துவோம், கைகோள் என்பார் - இது நாம்
செய்தற்குரிய செயலாம் என்பர், (எ - று.)
கைகோள் - செயல்.
 

( 65 )

 

1196. உயிரினு மதிக்கற் பால
     துள்ளப்பே ருறையி னுள்ள
தயிறரும் பனிக்குந் திண்மை
     யானநா ணதனை யேற்றி
வயிரவின் மனத்த தாகக்
     கையது வையங் காக்குஞ்
செயிரில்வில் லதனை நோக்கிச்
     செங்கதிர்ப் 1பெயரன் சொன்னான்.
     (இ - ள்.) உயிரினும் மதிக்கற்பாலது - உயிரையும் காட்டில் உயர்வாக மதித்து ஓம்பும்
தகுதியுடையதும், உள்ளப்பேர் உறையின் உள்ளது - உள்ளம் என்னும் ஒரு பெரிய
உறையின் கண் உள்ளதும், அயில்தரும் - கூர்மை நல்காநின்ற, பனிக்கும் திண்மை -
பகைவரை அச்சுறுத்துவதும் திண்மையுடையதும் ஆகிய, வயிரவில் - மறத்தன்மை என்னும்
சிறந்ததொரு வில், மானநாண் அதனை ஏற்றி - மானமாகிய நாண்ஏற்றப்பட்டு,
மனத்ததுஆக - தன்மனத்தகத்தே உளதாகா நிற்ப, கையது - தன் கைத்தலத்தே
உள்ளதாகிய, வையங்காக்கும் - உலகத்தை ஓம்புதற்குரிய, செயிர்இல் வில்லதனை நோக்கி
- குற்றமில்லாத விற்படையைப் பார்த்து, செங்கதிர்ப்பெயரன் - அருக்ககீர்த்தி என்னும்
பெயரையுடையவன், சொன்னான் - கூறுவான் ஆயினான், (எ - று.)
 

     (பாடம்) 1பேரன்.