பக்கம் : 759 | | ஏற்றி - ஏற்றப்பட்டு. உயிரினும் சிறந்ததும், உள்ளமாகிய உறையகத்தே உள்ளதும், கூர்மை நல்குவதும், பகையை அச்சுறுத்துவதும், திண்ணியதும் மானம் என்னும் நாணேற்றப்பட்டதும் ஆகிய மறம் என்னும் வில் ஒன்று, தன் அகத்தே உளதாக, தன் கையின்கண் உள்ள வில்லை நோக்கி, அருக்ககீர்த்தி கூறினான், என்க. | ( 66 ) | அருக்ககீர்த்தியின் மறவுரை | 1197. | அடுந்திறல் வெகுளிக் காற்றோ டருக்கப்பே ருடைய மேகங் கொடுஞ்சிலை குலவக் கோலிக் குருதிநீர் வெள்ள மோடக் கடுங்கணை யென்னுந் தாரை கலந்துமேற் பொழிய வேந்தர் நடுங்கினர் பனிக்கும் போழ்தி னம்மையு மறிவ தென்றான். | (இ - ள்.) அடுந்திறல் வெகுளிக் காற்றோடு - கொல்லும் ஆற்றலுடைய சினம் என்னும் காற்றோடு கூடி, அருக்கப் பேர் உடைய மேகம் - அருக்ககீர்த்தி என்னும் பெயரையுடைய முகில் ஒன்று, கொடுஞ்சிலை குலவக் கோலி - கொடிய வில்லைப் பயில வளைத்து, குருதிநீர் வெள்ளம் ஓட - செந்நீர் வெள்ளம் பெருகிப் பாயும்படி கடுங்கணை என்னும் தாரை - விரைந்த செலவினையுடைய அம்புகள் என்னும் மழைத்தாரையை, கலந்துமேற் பொழிய - ஒரு சேரப் பொழியா நிற்ப, வேந்தர் பகைமன்னர்கள், நம்மையும் அறிவது - நம்முடைய ஆற்றலை அறிந்து கொள்வது, நடுங்கினர் பனிக்கும் போழ்தில் என்றான் - நடுங்கி வருந்தும் அந்தக் காலத்தேதான் என்று கூறினான், (எ - று.) சினமென்னும் காற்றோடே, அருக்ககீர்த்தி என்னும் முகில், வில் வளைத்துக், குருதி வெள்ளம் ஓடும்படி கணைகளாகிய தாரையை வீசும் போதன்றோ ! நடுங்கி, நம்மை அவர் மதிப்பது எனறான் என்க. | ( 67 ) | விசயனின் வெகுளி மொழி | 1198. | அலைகடல் வண்ணன் றம்மு னலர்குழை புரளுங் காதிற் சிலைபடு வயிரத் தோளான் செங்கதிர் 1முறுவ றோன்றி யிலைபடு வயிரப் பைம்பூ ணிமையவ ரல்ல ராயின் மலைபடு கிருமி யோநம் மாறுநிற் பனகள் ளென்றான். | (இ - ள்.) அலைகடல் வண்ணன் தம்முன் - அலைவீசுகின்ற கடல்போன்ற நீலநிறமுடைய திவிட்டநம்பியின் தமையனாகியவனும், அலர்குழை புரளும் காதில் - விரிந்த குண்டலம் பிறழ்கின்ற செவியின்மேல், சிலைபடு வயிரத்தோளான் - வில் பொருந்துமாறு மாட்டிய உறுதியுடைய தோள்களையுடையவனும் ஆகிய விசயன் என்பான், செங்கதிர் முறுவல் தோன்றி - கதிரவன் ஒளிபோன்ற ஒளியையுடைத்தாகப் புன்முறுவல்பூத்து, இலைபடு வயிரப் பைம்பூண் இமையவர் அல்லராயின் - இலை போன்ற உருச்செதுக்கிய வயிரத்தாலியன்ற பசிய அணிகலன்களையுடைய அமரர்கள் அல்லாதவிடத்து, மலைபடு கிருமியோ - மலையிலே புழுத்த இப்புழுக்களேயோ, நம் மாறு நிற்பனகள் என்றான் - நமக்குப் பகையாய் நம்மை எதிர்த்து நிற்க வல்லுந என்று இழித்துக் கூறினான், (எ - று.) | |
| (பாடம்)1முறுவற். | | |
|
|