பக்கம் : 762
 

     இறைவனைத் தொழுது கொண்டான், அருகக்கடவுளை வணங்கி ஏற்றுக்கொண்டான்
எனினுமாம். நம்பி ! நீ கூறுவது உன் தகுதிக்குத் தக்கதே யன்றித் தகாததன்று; என்பால்,
சில விச்சையுள; அவையிற்றை நீ மனக்கொளல் வேண்டும், என்று ஓத, நம்பியும் அவற்றை
உளத்தே கொண்டான் என்க.
 

( 71 )

அம் மந்திரத் தெய்வங்கள் திவிட்டன் முன் தோன்றுதல்

1202. மந்திர வெழுத்து வள்ள
     லுள்ளத்துப் பொறித்த போழ்தே
1யந்தர விசும்பிற் றெய்வ
     மணுகின பணியென் னென்னா
வெந்திறல் விஞ்சைக் கேற்ற
     வியன்சிறப் பியற்றி வேலோ
னுந்தொழில் புகுந்த போழ்தி
     னோக்குமி னெம்மை யென்றான்.
 
     (இ - ள்.) மந்திர எழுத்து வள்ளல் உள்ளத்துப் பொறித்த போழ்தே -
அம்மந்திரங்களின் எழுத்துக்களைத் திவிட்டநம்பி தனது உள்ளத்திலே நன்கு பதியப்
பயின்றவுடனேயே, பணியென் என்னா அந்தரவிசும்பில் தெய்வம் அணுகின -
விசும்பினிடையே வாழும் அம்மந்திரத்திற்குரிய தெய்வங்கள் எமக்கு அருளற்பால
கட்டளைகள் யாவை என வினவினவாய்த் திவிட்டநம்பியை அடைந்தன, வேலோன்
வெந்திறல் விஞ்சைக்கேற்ற வியன்சிறப்பு இயற்றி - திவிட்டநம்பியும் வெவ்விய ஆற்றல்
மிக்க அம்மந்திரத் தெய்வங்களுடைய தகுதிக்குப் பொருந்துமாற்றானே பெரிய
சிறப்புக்களைச்செய்து, நும்தொழில் புகுந்த போழ்தின் எம்மை நோக்குமின், என்றான் -
உம்மால் செய்தற்குரிய உதவித் தொழில்கள் வேண்டப்படும் காலத்தே எம்மைப்
பார்த்துக்கொள்ளுங்கோள் என்று கூறினான், (எ - று.)

மாமன் செவியறிவுறுத்த மந்திர எழுத்துக்களை, உள்ளத்தே நம்பி கொண்டபொழுதே
அம்மந்திரத் தெய்வங்கள், அவன் முன்னர்த் தோன்றி, எமக்குப் பணி யாதென வினவ,
நம்பி அவற்றிற்குச் சிறப்புச்செய்து, யான் நும்முதவியை வேண்டுங்கால் வந்து உதவுக
என்றான், என்க. இச் செய்யுளோடு கம்பராமாயணத்தில் வேள்விப் படலத்து 2-ஆம்
3-ஆம் செய்யுள்கள் ஒப்பு நோக்கற்பாலன.
 

( 72 )

இரண்டு விஞ்சைத் தூதர் திவிட்டன்பால் எய்துதல்

1203. ஓதிய விஞ்சை வாய்ப்ப வுலகடிப் படாது நின்ற
வாதிசா லமர கற்ப மாமென வமருங் 2காலைத்
தூதுவ ருருவக் காளை செவிசுடு சரம்பெய் தூணி
மாதிரத் தொசிந்த வேபோல் வந்தொருங் கிருவர் நின்றார்.
    

 


     (பாடம்) 1 யந்திர. 2போழ்தில்.