பக்கம் : 764 | | யாங்கள் அச்சுவகண்டன் தூதர்கள்; அரசர்களே! எம்மொழி கேண்மின்; கன்னியைத் தருதிரோ! அன்றேல் காளை இன்னுயிர் தருதிரோ! இரண்டில் ஒன்று துணிந்துரைமின் என்றார், என்க. | ( 74 ) | திவிட்டனின் சினம் | 1205. | கடுத்தவர் கன்னிபே ருரைக்கக் கண்களுட் பொடித்தன புகைத்திரள் பொழிந்த தீப்பொறி யடுத்தெழு கின்றதோ ராவி யாரழன் மடுத்தது மனத்திடை 1மைந்தற் கென்பவே. | (இ - ள்.) கடுத்தவர் கன்னிபேர் உரைக்க - செருக்கான் மிக்கவராகிய தூதர்கள் சுயம்பிரபையின் பெயரைத் துணிந்துரைத்தலும், மைந்தற்கு மனத்திடை - திவிட்டனுடைய நெஞ்சகத்தே, அடுத்து எழுகின்றதோர் ஆவிஆர் அழல் மடுத்தது - அடுத்தடுத்து உண்டாகின்ற ஒப்பற்ற புகையுடைய சினத்தீ பற்றுவதாயிற்று, கண்களுள் புகைத்திரள் பொடித்தன - கண்களிலிருந்து புகைப்படலங்கள் எழுந்தன, தீப்பொறி பொழிந்த - நெருப்புப் பொறிகள் சிதறின, என்ப - என்று கூறுவர், ( ) அச்சுவகண்டன் தூதர்கள், சுயம்பிரபையைத் தருதிரோ! என்றவுடன் நம்பியின் மனத்திடை சினத்தீயுண்டாயது. கண்கள் தீக்கான்றன என்க. | ( 75 ) | இதுவுமது | 1206. | கண்கன லுமிழ்ந்துதம் புலமுங் காணல வெண்கதிர் மணிமுத்தம் விதிர்க்கும் மேனியன் புண்களு ளெஃகெறிந் தனைய புன்சொலால் விண்களை வெதுப்பினன் வீர னென்பவே. | (இ - ள்.) கண்கனல் உமிழ்ந்து தம் புலமுங் காணல - கண்கள் நெருப்பைக் காலுதலால் தமது காட்சிப் புலனாகிய ஒளியைக் காணமாட்டாவாயின, வீரன் வெண்கதிர் மணிமுத்தம் விதிர்க்கும் மேனியன் - மறத்தன்மை மிக்க திவிட்டன் வெண்சுடர்வீசும் முத்தமணிகளைப் போன்ற வியர்வை நீர்த்துளிகளை உதிர்க்கும் உடலையுடையனாய், புண்களுள் எஃகு எறிந்தனைய புன்சொலால் - பழைய புண்களிலே வேற்படையை எறிந்தாற் போன்று இன்னல் தருகின்ற தூதர் உரைத்த இன்னாச்சொல் காரணமாக, விண்களை வெதுப்பினன் என்ப ஏ - விசும்பு முழுதும் வெப்பமுறச் செய்தான், என்று கூறுவர், (எ - று) | |
| (பாடம்) 1 மன்னற். | | |
|
|