பக்கம் : 767
 

 

  பேதையர் பிழைத்தது பொறுக்கல் வேண்டுமாற்
போதலே பொருளிவர் போக போகவே.
 

     (இ - ள்.) தூதுவர் முறைப்படும் தொன்மையால் - தூதராகி வந்தோரை நலிதலாகா
என்னும் ஒரு பழைய வழக்கமுண்மை காரணமாக, இவண் - இவ்விடத்தே, தீதுஉரை
கொணர்ந்து - ஆற்றவும் இன்னாதனவாகிய சொற்களைச் சுமந்து கொடுவந்து, நஞ்செவிகள்
சுட்ட இப்பேதையர் - நமது செவியகத்தைச்சுட்ட இவ்வறிவிலிகள், பிழைத்தது பொறுக்கல்
வேண்டுமால் - செய்த பிழையை யாம் பொறுத்துக்கொள்ளவே வேண்டும் ஆதலால், இவர்
போதலே பொருள் - இப்பேதையர் நம்மால் நலியப்படாது மீண்டுபோவதே சிறப்பாம்,
போக போக ஏ - எனவே இவர் உய்ந்து போவாராக, (எ - று.)

போக, போக என்னும் அடுக்குச் சினமிகுதிக்கண் வந்தது. இத்தகைய தீச்சொல்லைக் கூறி
நம் செவிதீய்த்த இக்கயவர், தூதர் என்னும் பெயரோடு வந்தமையால் கொல்லப்படாது
விடப்படுபவர் இவர் அகல்க! அகல்க! என்றான் என்க.
 

( 80 )

வேந்தர் கூற்று

1211. வில்லவன் மொழிதலும் வீர வேந்தர்க
ளொல்லென வொலித்தெழுந் துடன்று சொல்லுவார்
கல்லுயர் கருவரை கருதி யாமிவை
சொல்லிய தெனச்சிலர் சுருங்கச் சொல்லினார்.
 
     (இ - ள்.) வில்லவன் மொழிதலும் - விற்படையையுடைய திவிட்டநம்பி இவ்வாறு
கூறியவுடனே, வீரவேந்தர்கள் - மறத்தன்மையுடைய மன்னர்கள், ஒல்லென ஒலித்து எழுந்து
- ஒல்லென்னும் ஒலியுண்டாகுமாறு ஒருங்கே ஆரவாரித்து எழுந்து, உடன்று சொல்லுவார் -
சினந்து சொல்லத் தொடங்கியவர்களுள், கல்லுயர் கருவரை கருதி யாம் இவை சொல்லியது
என - சிகரங்கள் உயர்ந்த பெரிய உத்தரசேடி என்னும் மலை தனக்குளதாகியதனால்
உண்டாகிய செல்வச் செருக்காற் போலும் இத்தகைய இன்னாச் சொற்களை
அவ்வச்சுவகண்டன் சொல்லத் துணிந்தது என்று, சுருங்கச் சொல்லினார் சிலர் - தம் கருத்து
நன்கு தோன்றவும் சொற்சுருங்கவும் சிலர் இயம்பினார்கள், (எ - று.)
நம்பி இவ்வாறு கூறியவுடன் வீரவேந்தர் உடன்று எழுந்து அவ்வச்சுவகண்டன்
மலைகளையுடைய செருக்கானன்றோ இவ்வார்த்தைகள் கூறத் துணிந்தான் என்று
புகைந்தனர் என்க. அவன் மலைநாட்டைப் பற்றிக் கொள்வோம், என்றவாறு:
 

( 81 )