(இ - ள்.) ஆழியும் அகலத்த திருவும் - அவ்வச்சுவகண்டன் செருக்குக்குக் காரணமான ஆழிப்படையையும் மார்பின் கண்ணுறையும் திருமகளையும், வாங்கி - பறித்து, இப்பாழியம் தோளினான் பால ஆக்கினால் - பரியவும் அழகியவும் ஆகிய தோள்களையுடைய இத்திவிட்ட நம்பியினிடத்தே சேர்த்துவிட்டால், ஏழையும் - அவ்வாற்றால் எளியனாகிய அவ்வச்சுவகண்டனும், பின்னர், எம்மையும் அறியும் என்றனர் - நம்மையும் பொருளாக நன்கு அறிந்துகொள்வான் என்று கூறினர், அவர்கள் யார் எனில், வாழைமேல் வயிரம் கூர்த்தனைய மாண்பினார் - காழற்ற வாழை மரத்தின் மேலே வச்சிரப்படை சினந்துமிக்காற் போன்று பகைவரைச் சினந்து புக்கழிக்கும் மறமாண்புடைய வேந்தர்கள், (எ - று.) அச்சுவகண்டன் ஆழியையும், செல்வத்தையும் கவர்ந்துகொண்டால் அவன் நம்மை அறிவான், என்றார் என்க. வாழைக் காட்டை அழிக்க வச்சிரப்படை சினந்தெழுந்தாற் போன்று சினந்தெழுந்த வீரர் என்றார் எளிதாக அழிக்கவல்லார் என்றற்கு. கூர்த்தல் - சினத்தான் மிகுதல். |
(இ - ள்.) வாள் நிலா மணிநகை முறுவலாள் திறத்து - நிலவொளி பரப்பும் முத்துப்போன்று திகழ்கின்ற பற்களையுடைய சுயம்பிரபையின் திறத்தில் வைத்து, ஏண் இலார் - வலியற்ற நம் பகைவர், இயம்புவது இயம்பின் அல்லது - பேச்சளவிலே பேசலாம் அன்றி, காணலாம் எல்லையுட் புகுந்து - ஒருவரை ஒருவர் பார்க்கத் தகுவதாகிய போர்க்கள வரைப்பிலே புகுந்து, பீடுகாண்பதே கட்டுரை பேணலாம் - தத்தம் பெருமையை அறிந்து கொள்ளுதலே சிறந்த தம் மொழியைப் பொருளுடையனவாக ஓம்புதல் ஆகும், பிற பிற - இவ்வாற்றானன்றிப் பிறவாற்றாற் பேசுவதெல்லாம் பொருள் அற்ற வெறுஞ்சொற்களே ஆம், (எ - று.) |