பக்கம் : 772
 

     (இ - ள்.) அரசு இளங்குமரனை - பயாபதி மன்னனின் இளைய மகனாகிய
திவிட்டநம்பியை, அனற்று மாற்றலர் - வெகுள்விக்கின்ற பகைவருடைய, முரசினுள்
மணிஅரவு உறைந்த - முரசமாகிய இசைக்கருவியினுள்ளே மணியையுடைய பாம்புகள்
வதிந்தன, முத்துஅணி நிரைசுடர் நெடுங்குடை அகடு - முத்துக்களால் அழகுறுத்தப்பட்ட
ஒளிவரிசையினையுடைய நீண்ட குடையின் அகத்தே, நெய்கனி பிரசங்கள் -
நெய்ப்புடைத்தாய்க் கனிதலையுடைய தேன், விலங்கப் புரைபுரை பெய்தவே -
தொளைகடோறும் இடையிட்டுத் துளித்தன, (எ - று.)
குடையினுள்ளே தேன்கூடு கட்டப்பட்டன என்க. இனி அச்சுவ கண்டன் திறத்து நிகழ்ந்த
தீநிமித்தம் கூறுகின்றார். மாற்றலர் முரசினுள் அரவுறைந்தன; குடையினுள்ளே தேன்
கூடுகட்டின, என்க.
 

( 89 )

இதுவுமது

1220. கதிர்மணித் தேர்க்கொடிஞ் சேறிக் காக்கைக
ளெதிரெதிர் சிலம்பின வெரிந்த மாதிர
முதிரநீர்ப் புதுமழை சொரிந்த துச்சியி
னதிர்தரு கவந்தங்க ளாடி யிட்டவே.
 
     (இ - ள்.) கதிர்மணி தேர் கொடிஞ்சு ஏறி காக்கைள் - ஒளியுடைய மணிகள் பதித்த
தேரினது கொடிஞ்சுகளிலே காக்கைள் ஏறியிருந்து, எதிர்எதிர் சிலம்பின - மாறிமாறிக்
கரைந்தன, மாதிரம் எரிந்த - திசைகள் தீப்பற்றி எரிந்தன, புதுமழை உச்சியின் உதிரநீர்
சொரித்த - புதுவதாய மேகங்கள் வானவுச்சியில் கூடிக் குருதி மழை சொரிந்தன,
அதிர்ந்தரு கவந்தங்கள் ஆடியிட்டவே-ஒளியையுடைய குறைத்தலைப் பிணங்கள்
கூத்தாடின, (எ-று.)

தேர்க் கொடிஞ்சியினில் காக்கைகள் ஏறி மாறிமாறிக் கரைந்தன; திக்குகள் எரிந்தன;
குருதிமழை பொழிந்தது; கவந்தமாடின; என்க.
 

( 90 )

இதுவுமது

1221. விடவரு மியல்புக டிரிந்து மெல்லியன்
மடவர லவரொடு மாறு பட்டனர்
படவர வல்குலார் காதிற் பையெனச்
சுடர்தரு குழைகடா மழிந்து சோர்ந்தவே.
     (இ - ள்.) விடவரும் இயல்புகள் திரிந்து - ஆடவர்கள் தாம் நல்லியல்புகளிற்
பிறழ்ந்து, மெல்லியல் மடவரலவரொடு மாறுபட்டனர் - மென்மைத் தன்மையுடைய
பெண்டிரொடு பகைக்குணம் உடையராயினர், படஅரவு அல்குலார் - பாம்பினது படத்தை
ஒத்த அல்குலையுடைய மகளிர்களின், காதில் - செவிகளிலே பெய்யப்பட்ட, சுடர்தரு
குழைகள்தாம் - ஒளி வீசுதலையுடைய தோடுகள், பைஎன அழிந்துசோர்ந்த - மெல்ல
நழுவி வீழ்ந்தன, தாம், ஏ : அசைகள், (எ - று.)