(இ - ள்.) கொண்டல்கிளர்ந்து பரந்து குவிந்து - முகில்கள் மிக்குப் பரவிச் செறிந்து, அலைமண்டுவபோல் - அலை அலையாய் விரைந்து செல்வதைப் போன்று, விண்தவழ் மின்னிடு வாளினர் வில்லினர் - விசும்பின்கட் டவழ்கின்ற மின்னலைப் போன்று ஒளிர்கின்ற வாளை ஏந்துநரும் வில்லை ஏந்துநரும் ஆகி, எண் திசையும் இருள்கூர - எட்டுத் திக்குகளிலும் இருள்மிகும்படி, மணமாநகர் முன்னி - திருமணம் நிகழப்பெற்ற போதன மாநகரத்தை எய்தி, இழிந்தார் - இறங்குவாராயினர், (எ - று.) முகில்கள் குழுமி அலை அலையாய்ச் சென்றாற் போன்று, எண் டிசையும் இருளும்படி, போதனநகரத்தை எய்தி இறங்குவாராயினர் என்க. |