பக்கம் : 785 | | அருக்ககீர்த்தியின் ஒரு கை இடையறாது தூணியிற் காணப்பட்டது, மற்றொரு கையில் வில் தோன்றிற்று, வில் வட்டமாகவே காணப்பட்டது, அம்புகளே காணப்படும் அளவினவல்ல, மிக்கன என்க. | ( 114 ) | | 1245. | ஒன்றுதொ டுத்ததொ ராயிர மாம்பல வென்றுதொ டுத்தன வெண்ணில வாஞ்சரம் அன்றுதொ டுத்தவ னெய்தன வையகம் நின்றுதொ டுத்துநி ரந்தன வன்றே. | (இ - ள்.) தொடுத்தது சரம் ஒன்று ஒராயிரம் ஆம் - தொடுக்கப்பட்ட ஒருகணையே செல்லும்போது ஓராயிரம் அம்புகளாகிச் செல்லும், பலவென்று தொடுத்தன சரம் எண்ணிலவாம் - இனி ஒரே தொடையிற் பலவாகத் தொடுக்கப்பட்ட கணைகளோ வெனில் அவை செல்லுங்கால் எண்ணிறந்தனவாகும், அன்று அவன் தொடுத்து எய்தன - அற்றைப்போரில் அவ்வருக்ககீர்த்தியால் இவ்வாறு தொடுத்து எய்யப்பட்ட கணைகள், வையகம் தொடுத்து நின்று நிரந்தன அன்றே - இவ்வுலக முழுதும் தொடர்ந்து நின்று பரவலாயின, அன்றே : அசை (எ - று.) தொடுக்கும்பொழுது ஒன்றாயிருந்த கணை விடுக்கும்போது ஆயிரமாம், தொடுக்கும்போது பலவாகிய கணைகள் விடுக்கும்போது எண்ணிலவாம், அன்று அருக்ககீர்த்தி தொடுத்த அம்புகள் உலகமுழுதும் பரவின என்க. | ( 115 ) | | 1246. | விண்மிசை யேறிய வெஞ்சரம் விஞ்சையர் கண்மிசை 1யேறலு மேகடி தேதிசை யெண்மிசை யின்றியி ருண்டன வோவென மண்மிசை வீழ்ந்தும யங்கின ரன்றே. | (இ - ள்.) விண்மிசை யேறிய வெஞ்சரம் - வில்லினின்றும் விடப்பட்டு விசும்பிற் பாய்ந்த வெவ்விய அம்புகள்’ விஞ்சையர் கண்மிசை யேறலும் - விச்சாதரருடைய கண்களிலே ஊடுருவிப் பாய்ந்தவுடனே, கடிதே - விரைந்து, திசை எண் மிசையின்றி இருண்டனவோ - திக்குகள் கருதற்கு இயலாதபடி இருண்டுபோயினவோ என்று, மண்மிசை வீழ்ந்து - நிலத்தின் மேல் விழுந்து, மயங்கினர் அன்றே - தமக்கு யாது நேர்ந்ததென அறியாதவராய் மயங்கினார்கள், அன்றே : அசை. (எ - று.) எண்மிசை - நினைப்பின்மேல். அருக்ககீர்த்தியின் கணைகள் கண்களில் ஊடுருவ உருண்டவர். தம் கண்ணில் கணையேறியதறியாராய், திசைகள் இருண்டன என்று கருதி நிலத்தில் வீழ்ந்து மயங்கினர் என்க. | ( 116 ) |
| (பாடம்) 1 யேறின - யொன்றின். | | |
|
|