பக்கம் : 786 | | பகைவர் நிலை | 1247. | இருள்பா யினவா லிதுவென் னெனவே மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார் தெருள்வார் திரிவார் செருவார் 1கணையா லுருள்வார் களுமா கியுடைந் தனரே. | (இ - ள்.) இருள் பாயினவால் இது என் எனவே மருள்வார் - இப்பகற்போதின் கண்ணே இருள் பரவியுளது இதற்குக் காரணம் யாது என்றியம்பி வியப்பாருமாய், வெருள்வார் - அஞ்சுவாருமாய், மறைவார் - ஓடி ஒளிவாருமாய், மறிவார் மீள்வாருமாய், தெருள்வார் - இந்நிலை அருக்ககீர்த்தியின் விற்போரான் ஆயிற்று என உணர்வாருமாய், திரிவார் - குறிக்கோளின்றித் திரிவாருமாய், செருவார் கணையால் - போர்த்தொழிலுக்கியன்ற அம்புகளால் ஏறுண்டு, உருள்வார்களுமாகி - நிலத்தே கிடந்து புரள்வாரும் ஆகி, உடைந்தனரே - அருக்ககீர்த்தியைச் சூழ்ந்த அச்சுவகண்டனுடைய மறவர்கள் ஆற்றாதே ஓடினர். அருக்ககீர்த்தியின் கணையாலே உலகம் இருண்டுவிட்டமையால் மருள்வாரும் வெருள்வாரும், மறைவாரும், மீள்வாரும், தெருள்வாரும், கணையேறுண்டு உருள்வாரும் ஆயினர் என்க. | ( 117 ) | | 1248. | உடைந்திடு படையிடை யொலிகொண் மால்வரை யிடைந்திடும் படியெழுந் திடறி யேகினார் படந்தொடி னுடன்றெழு 2பணிகள் போற்பகை கடைந்திடுங் கடுந்திறற் கால வீரரே. | (இ - ள்.) படம் தொடின் உடன்று எழு பணிகள்போல - தமது பணத்தைத் தீண்டிய உடனே சீறி எழுகின்ற பாம்புகளைப்போன்று, பகை கடைந்திடும் கடுந்திறல் காலவீரரே - சினந்தெழுந்து பகைவர்களைக் கலக்கி ஒழிக்கும் கடிய ஆற்றலுடைய காலனை ஒத்த மறவர்கள், மால்வரை இடைந்திடும்படி - பெரிய மலைகள் பின்னிட்டுப் புடைபெயர்ந்தாற்போன்று, உடைந்திடும் ஒலிகொள் படையிடை - ஆற்றலழிந்து திரும்பிய முழக்கமிக்க தம் படைகளிடையினின்றும், எழுந்து இடறி ஏகினார் - புறப்பட்டுப் பிணங்களை இடறிக்கொண்டு ஓடுவாராயினர், (எ - று.) படத்தைத் தொட்டவுடன் சீறியெழும் பாம்புபோன்றவரும், காலனை ஒத்தவருமாகிய சிறந்த வீரரெல்லாம், அருக்ககீர்த்திக்கு ஆற்றாது பிணங்களை இடறி ஓடினர், என்க. | ( 118 ) |
| (பாடம்) 1 சிலையரல். 2 மரவு. | | |
|
|