பக்கம் : 790
 

அச்சுவகண்டன் சினமொழி

1255. ஒன்றுவில் லிரண்டுதோ ளொருவ னெய்யவே
யின்றுநம் படையுடைந் திட்ட தாய்விடி
னன்றுபோர் நமர்கள தென்று நக்கனன்
குன்றுபோற் பெருகிய குவவுத் தோளினான்.
 
     (இ - ள்.) ஒன்றுவில் - வில்லும் ஒரோ ஒன்று, இரண்டு தோள் ஒருவன் எய்யவே
- அதனை எய்தானும் இரண்டே தோள்களையுடைய ஒருத்தனே, இன்று நம்படை
உடைந்திட்ட தாய்விடின் - இத்துணைக்கே ஆற்றாது இன்று ஒரே நாளில் நமது
பெரும்படை தோற்றோடியதாயவிடத்து, நமர்களது போர் நன்று என்று நக்கனன் - நம்
மறமன்னர்களின் போர் ஆற்றும் திறம் நன்று நன்று என்று கூறிச் சினத்தாற்
சிரிப்பானாயினன், குன்றுபோற் பெருகிய குவவுத் தோளினான் - மலை போன்று பருத்துத்
திரண்டுள்ள தோள்களையுடையவனாகிய அச்சுவகண்டன், (எ - று.)

ஒரே விற்பிடித்து இரண்டுதோளுடை ஒருத்தன் எய்யவோ அளவிறந்த நம் வீரர்
உடைந்தனர்! நன்று! நன்று! என நக்கான் என்க.

முருகனும் இராவணனும் கார்த்தவீரியனும் அல்லன் என்பான், இரண்டு தோள் ஒருவன்
என்றான்.
 

( 125 )

மற்றொரு தூதன் இரதநூபுரத்திற்குச் சென்ற நம்படை
உடைந்ததெனல்

1256. இரதநூ புரத்தின்மே லெழுந்த வேந்தரும்
பொருதுதா 1மழிந்தமர் புறக்கிட் டோடினார்.
2அரிதினின் விளைவரை யன்றி யாவருங்
கருதிய முடிப்பவ ரில்லை காண்மினே.
 
     இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்.

     (இ - ள்.) இரதநூபுரத்தின்மேல் எழுந்த வேந்தரும் தாம் - இரதநூபுரச்
சக்கிரவாளத்தின்மேற் சென்ற நம் மன்னவரும், அமர்பொருது அழிந்து புறக்கிட்டு ஓடினார்
- ஆண்டுப் போராற்றிப் பகைவர்க்குத் தோற்றுப் புறமிட்டு ஓடியுள்ளனர், அரிதினின்
விளைவதை அன்றி - இவர்க்கு வெற்றி எங்கேனும் அருமையாக உண்டாதலே யல்லது,
யாவரும் - நம் படைஞர் அனைவருள்ளும், கருதிய முடிப்பவர் இல்லை காண்மின்-தாம்
கருதியவற்றை (இதனால் இதனை இன்னபடி முடிப்பேன் என்று ஆராய்ந்து அதனை
அதனால் அவ்வாறே) முடிக்கும் வினைத்திட்பம் உடையார் ஒருவரேனும் இலர்,
இவ்வுண்மையை நன்கு உணருங்கோள், (எ - று.)
 

     (பாடம்) 1 மழிந்தவர். 2 உரிதினின்.