பக்கம் : 794
 

நீலகண்டன் சினநகை

1262. மாலுமாங் குடையர்கொன் 1மனிதர் நம்மொடு
போலுமாற் பொரலுறு கின்ற தென்றுதன்
கோலவால் வளையெயி றிலங்க2க் கூறினான்
நீலமா மணிக்கண்ட னென்னு 3நேரிலான்.
     (இ - ள்.) மனிதர் நம்மொடு போலும் பொரல் உறுகின்றது, எளிய மனிதர்களேயோ
நம்மோடு போர் ஆற்றத்துணிவது - ஆங்கு மாலும் உடையர் கொல் - அத்தகையதொரு
மதி மயக்கமும் அவர் உடையரோ, என்று தன் கோல வால்வளை எயிறு இலங்கக்
கூறினான் - என்று தன்னுடைய அழகிய வெண்ணிறமான வளைந்த பற்கள் விளங்க
உரைத்தான் நீலமா மணிக் கண்டன் என்னும் நேரிலான் - மரகதமணி போன்ற நிறமுடைய
கழுத்துண்மையால் நீல கண்டன் என்னும் பெயரை யுடையவனாகிய ஒப்பிலாதவன், (எ -
று.)
நீலகண்டன், தம்மோடு போர் செய்து வெல்லலாம், என்று மனிதர் எண்ணியது
மயக்கத்தாலே தான், என்று தன் பற்கள் புறந்தோன்ற நக்கான் என்க.
 

( 132 )

வயிரகண்டன் வீர மொழி

1263. முளைந்தவா ளெயிற்றவர் முலைகள் பாய்ந்து தேன்
விளைந்ததார் வெறிகொள வைகும் வேற்றவ
ருளைந்தபோர் நிலத்தினுள் ளுருள்ப வென்றனன்
வளைந்தவா ளெயிற்றவன் வயிர கண்டனே.
 
     (இ - ள்.) வளைந்த வாள் எயிற்றவன் வயிரகண்டன் - மற்றொரு தம்பியாகிய
வளைந்த ஒளியுடைய பற்களையுடைய வயிரகண்டன் என்பான், முளைந்த வாள் எயிற்றவர்
முலைகள் பாய்ந்து தேன் விளைந்த தார் வெறிகொள் வைகும் வேற்றவர் - இதுகாறும்
நிரல்பட முளைத்த ஒளியுடைய பற்களையுடைய இளமகளிர்களின் முலைகள் பாய்தலால்
நெருக்குண்டு தேன்றுளிக்கும் மலர் மாலைகள் மணங்கமழுமாறு இனிதின் வதிந்த நம்
பகைவர், உளைந்த போர் நிலத்தினுள் உருள்ப - இனி அந்தோ! வருந்திய போர்க்களத்தே
பிணமாய் உருளா நிற்பர் பாவம்!, என்றான் - என்று இயம்பினான், (எ - று.)

முளைந்த : மெலித்தல் விகாரம் : நிரல்பட முளைத்த என்க.
 

     (பாடம்)1 மனிசர். 2 நக்கனன். 3 ங்காளையே.