பக்கம் : 796
 

     இவ்வாறு கூறிய தம்பியரின் வீரமொழியாலே, ஆறுதலடைந்த அச்சுவகண்டன்,
தம்பியர்காள் ! நீவிர் மண்மிசை நம் பகைவரை வென்று, உங்கள் பெயரை
நிலைநிறுத்துங்கோள் என்றான் என்க.
 

( 135 )

விச்சாதரர் படை ஒருங்கெழுந்து போர் செய்தல்

1266. நஞ்சினை நஞ்சுசென் றெரிக்க லுற்றபோல்
விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி மேல்வர
வஞ்சமின் மணியொளி வண்ணன் றானையு
மெஞ்சலின் றெழுந்தெதி ரூன்றி யேற்றதே.
 
     (இ - ள்.) விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி - விச்சாதரர்கள் வெவ்விய வெகுளியை
வளர்த்துக்கொண்டு, நஞ்சினை நஞ்சு சென்று எரிக்கலுற்றபோல் - ஒரு நஞ்சினை மற்றொரு
நஞ்சு பகைத்துச் சுட்டொழிக்கச் செல்வதுபோல, மேல்வர - போர் மேற்கொண்டு வராநிற்ப,
வஞ்சம் இல் மணிஒளி வண்ணன் தானையும் - வஞ்சகமில்லாத திவிட்ட நம்பியினுடைய
படையும், எஞ்சல் இன்று எழுந்து - குறைவின்றி எழுந்து, எதிர் ஊன்றி ஏற்றதே -
விச்சாதரர் படைக்கு எதிர் சென்று தடுத்துப் போர் செய்யத் தொடங்கியது, ஏ : அசை, (எ
- று.)
விச்சாதரர் சினமிக்கு ஒரு நஞ்சினை மற்றொரு நஞ்சு பகைத்து வருமாப்போல வர,
நம்பிபடையும் சென்று எதிர்த்த தென்க.
 

( 136 )

 

1267. விண்ணின தளவுமேல் வந்த வேற்படை
மண்ணின தளவுமா றேற்ற வாட்படை
கண்ணிய கடற்படை யிரண்டு தம்மையு
மெண்ணினி நமக்கெளி தாவ தில்லையே.
 

     (இ - ள்.) மேல்வந்த வேற்படை - போர் மேற்கொண்டு வந்த விச்சாதரருடைய
வேலேந்திய படை, விண்ணினது அளவு - விசும்பு எத்துணை விரிவுடைத்து அத்துணை
விரிபுடையதாம், மாறு ஏற்ற வாள் படை - அப்படைக்கு எதிரூன்றிய மானிட வாள்வீரர்
படை, மண்ணினது அளவு - இம்மண்ணுலகம் எத்துணைப் பரப்புடைத்து அத்துணைப்
பரப்புடையதாம், கண்ணிய கடற்படை இரண்டு தம்மையும் - கருதப்பட்ட கடல்போன்ற
இவ்விரு படைகளையும், எண் இனி நமக்கு எளிதாவது இல்லை - இவ்வாறு கூறுவதன்றி
எண்ணல் அளவையுட் படுத்துக் கூறல் எமக்கு இனி எளிய செயலாகத் தோற்றிற்றில்லை,
(எ - று.)

அச்சுவகண்டன் படை விசும்பினளவிற்றென்றும், திவிட்டன் படை மண்ணுலகின்
அளவிற்றென்றும், கூறுதலின்றி அவற்றின் பெருக்கத்தை அளவைகளாற்
கூறவியலாதென்றபடி.
 

( 137 )