பக்கம் : 797
 

 

1268. கடலிரண் டுளவெனிற் 1கடுக்கு மக்கட
லிடைநில முடைமையி 2னென்று மொப்பில
வடலரும் படையவை யிரண்டு மவ்வழி
யடலரும் படையவை யிரண்டு மொக்குமே.
     (இ - ள்.) கடல் இரண்டு உளவெனில் கடுக்கும் - தனித்தனி இரண்டு கடல்கள்
உளவாயின் அவை இப்படைகட்கு ஒப்பாம் எனிலோ, அக்கடல் இடைநிலம் உண்மையின்
என்னும் ஒப்பில - அக்கடல்கள் தானும் தம்மிடைத் தீவுகள் உடையன வாதலின் சிறிதும்
ஒப்பாகமாட்டா, அடல் அரும் படையவை இரண்டும் - வெல்லுதற்கரிய அவ்விரு படையும்,
அவ்வழி - அவ்வாறிருக்குமாற்றால், அடல் அரும்படையவை இரண்டும் ஒக்கும் -
வெல்லற்கரிய அப்படைகள் இரண்டும் தம்முள் ஒன்றனை ஒன்று ஒப்பதாம் என்னலாம், (எ
- று.)

இரண்டு படைகளும் இரண்டு கடல்களை ஒக்குமெனிலோ அக் கடலிடைத் தீவுகள்
உண்மையின் ஒவ்வாவாம், இனி அவற்றிற்கு உவமை தேரின் அவை ஒன்றை ஒன்றொக்கும்
எனல் பொருந்தும் என்பதாம்.
 

( 138 )

 

1269. திண்டிறற் றேர்களே செறிந்த வென்னவுங்
கொண்டபோர் வேழமே குழீஇய வென்னவும்
விண்டவழ் புரவியே மிடைந்த வென்னவுங்
கண்டவர் கண்டுழிக் கலந்து தோன்றுமே.
 
     (இ - ள்.) திண்டிறல் தேர்களே செறிந்த என்னவும் - திண்ணிய ஆற்றல் உடைய
தேர்களே ஏனையவற்றையும் காட்டில் மிக்கு நெருங்கின என்று கூறுமாறும், கொண்ட
போர் வேழமே குழீஇய என்னவும் - போர் மேற்கொண்ட குஞ்சரங்களே மற்றெவற்றினும்
மிக்குக்கூடின என்று கூறுமாறும், விண்டவழ் புரவியே மிடைந்த என்னவும் - விசும்பிலே
பாய்தலுடைய குதிரைகளே மிக்குக் கூடியுள்ளன என்னுமாறும், கண்டவர் கண்டுழிக் கலந்து
தோன்றும் - இவையிற்றுள் ஒவ்வொரு படையையே கண்டவர்க்குக் காணுங்கால்
பரவித்தோன்றும், (எ - று.)
 

     (பாடம்) 1 நிகர்க்கு. 2 னென்னு.