பக்கம் : 80
 
     பகைவர்கள் கலங்குதற்குக் காரணமாகிய; கடல்அம் தானை இறைமகன் குறிப்பு
நோக்கி - கடல்போற் பரந்த அழகிய படையையுடைய அரசனது மனக்குறிப்பைப் பார்த்து;
தாமரைச் செங்கண் தம்மால் பணித்த - அவனுடைய தாமரை மலர்போலுஞ் சிவந்த
கண்களாற் காட்டப்பெற்ற; தானத்தர் ஆனார் - இடங்களிலே அமர்ந்தார்கள். (எ - று.)

     நூல் - பூணூல்; பூ - பொலிவு, பூமருநூல், புரிந்தநூல், நுண்ணூல் எனத் தனித்தனி
கூட்டுக. வேள்வியாசிரியன் அமைச்சர் ஆகியோர் அரசனாற் குறிப்பிடப்பட்ட இடங்களில்
அமர்ந்தார்கள். மந்திரக் கிழவர் - மறைமுகமாகக் கலந்தெண்ணுதற்கு உரியவர்களாகிய
அமைச்சர்கள். மன்னார் - தம்மொடு பொருந்தாதவர்; எனவே பகைவர் என்பது
பெறப்பட்டது. கணணினாற் சொல்வது அரசர்கள் மாண்பு. ஆதலால்; “செங்கண் தம்மால்
பணித்த தானத்தரானார்“ என்றார்.

 ( 27 )

சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்

97. முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்
பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்.
 

     (இ - ள்.) முன்னவர் இருந்த பின்னை - முற்கூறப்பட்டவாறு வேள்வி யாசிரியனும்
அமைச்சர்களும் அமர்ந்த பிற்பாடு; மின் இவர் கடகம் பைம்பூண் - மின்னொளியைப்
போலும் ஒளி வீசுகின்ற கடகம் என்னும் கைவளையையும் மற்றும் பலவகையான
பசியபொன்னணிகளையும் பூண்டுள்ள; வென்றி வேல் வேந்தர் எல்லாம் - வெற்றி
பொருந்திய வேலையேந்திய அரசர்கள் அனைவரும்; மூரிநீர் உலகம் காக்கும் - பெருமை
பொருந்திய கடலாற் சூழப்பெற்ற உலகினைப் புரக்கும்; மன்னவன் கழலை - பயாபதி
அரசனது அடிகளில் அணிந்துள்ள வீரக் கழல்களை; தங்கள் மணிமுடி நுதியில் தீட்டி -
தங்கள் மணிகள் பதிக்கப்பெற்ற முடியின் முனையிலேபடச் செய்து வணங்கி; பின் - பிறகு;
அவன் பணித்ததானம் - அரசன் குறிப்பாற் காட்டிய இடங்களில்; பெறும்முறை வகையின்
சேர்ந்தார் - பெறுகின்ற முறைமையின் வரிசையின்படி அடைந்தார்கள். (எ - று.)