(இ - ள்.) வெறி மின் விரிகின்ற - ஒழுங்குபட ஒளி வீசுகின்ற, விறல் ஆழி இறைதோழன் - வெற்றிபொருந்திய உருளைப்படையினையுடைய பேரரசனாகிய அச்சுவக்கிரீவனுடைய நண்பன், பெயர் அரிசேனன் என யான் நின்றேன் - பெயர் அரிசேனன் என்று நான் அழைக்கப்பட்டு விளங்குகிறேன்; அறிமின் - இதனை உணர்ந்து கொள்ளுங்கள்; என்னொடு இகல் வல்லிர் உளர் ஆயின் - என்னோடு பகைத்துப் போர் செய்யக் கூடியவர்கள் இருக்கின்றீர்களாயின், எதிர் எறிமின் - எதிர்த்துப் போர் செய்யுங்கள், அது அன்றி - அவ்வாறில்லாமல், உயிர் வாழல்உறின் - உயிர்வாழ்தலை விரும்புவீர்களாயின், மறிமின் என்றான் - பெயர்த்து நீங்கிப் போங்கள் என்று கூறினான். வெறி என்னும் சொல் ஆவேசம், ஒழுங்கு, ஆடு, கள், மணம், வெறியாட்டு மயக்கம், முருகன்பூசை முதலிய பொருள்களைத் தந்து நிற்கும். “வெறிகொண்ட புள்ளினம்“ என்னும் கலித்தொகையும் காண்க. |
(இ - ள்.) அங்கு அவன் மொழிந்த மொழி கேட்டலும் - அவ்விடத்தில் அந்த அரிசேனன் என்பவன் சொன்ன சொற்களைக் கேட்ட அளவில், அருக்கன் வெங்கணை தெரிந்தது - அருக்கி கீர்த்தியானவன் அவனை எதிர்த்துப் போர் செய்வதற்காகச் சென்று கொடிய கணைகளை ஆராய்ந்து எடுத்துச் செலுத்தத் தொடங்கியதை, பொங்கு - மிகுந்த சினத்தையடைகிற, புலித்தேர்ப்பெயரன் - வியாக்கிரரதன் என்பவன், விலக்கி - தடுத்து, விறல் வெய்யோய் - வெற்றியை உடைய வீரனே!; இங்கு நினக்கு இவன் நிகரோ என இசைத்து - இவ்விடத்திலே நின்னோடு போர் செய்வதற்கு இவன் ஒப்பாவனோ என்று கூறி, போந்து - தானே போர் செய்வதற்கு வந்து, பொரல்உற்றான் - போர் செய்யத் தொடங்கினான், (எ - று.) இப்பாட்டின் மூன்றாவது அடி; “இங்கிவ னினக்குநிக ராகலுறுமென்றே“ என்று சில படிகளில் காணப்பெறுகிறது. அருக்ககீர்த்தி இளவரசனாதலின் வியாக்கிரரதன் இவ்வாறு கூறித் தடுக்கலானான். வியாக்கிரரதன் அருக்ககீர்த்தியின் படைத்தலைவன்; அரிசேனன் அச்சுவகண்டனுடைய தோழன். |