பக்கம் : 806 | | | | நின்னையறி யாதவர்க ணின்றிரிய வந்தா யென்னையறி யாயறி யினித்தவிர்தி யென்றான். | (இ - ள்.) பொன்னை அணிகொண்ட புனைகேடகம் எடுத்து - பொன்னினால் அழகு செய்யப்பட்டதாகிய அழகிய கேடகத்தை இடக்கையிலே எடுத்துக்கொண்டு, மின்னை உமிழ்கின்ற சுடர்வாள் - மின்னொளியை வெளிப்படுத்துகிற ஒளி தங்கிய வாட்படையானது, மிளிர வீசி - விளங்குமாறு வீசிக்கொண்டு, நின்னை அறியாதவர்கள் நின்று இரிய வந்தாய் - உன்னை இதற்கு முன்னால் உணர்ந்து கொள்ளாதவர்கள் திகைத்து நின்று அஞ்சுமாறு தோன்றினாய், என்னை அறியாய் - நீ என்னை உணரமாட்டாயோ : அறி - இப்பொழுது உணர்ந்து கொள்; இனி தவிர்தி என்றான் - ஆண்மைமொழி பேசுதலையும் அச்சுறுத்துதலையும் இனிமேல் விடுவாயாக என்றான், (எ - று.) இச்செய்யுளின் நான்காவதடி, “என்னையறி யென்றவனை வீழ வெறிந் தானே“ என்று சில படிகளிற் காணப்படுகிறது. பொன்னை அணிகொள்ளுதலாவது அழகின்பொருட்டுப் பொற்றகடுகள் பதித்து ஒப்பனை செய்யப்பெறுதல். | ( 155 ) | அரிசேனன் கூறுதல் | 1286. | நின்னையறி வன்பெரிது நின்முறைய ளாய கன்னியையோர் காளைபிற னெய்துவது கண்டு மன்னுமண வில்லுள்வயி றாரவயில் கின்றாய்க் கின்னுமுள வோபுதிய வென்றுமிக நக்கான். | (இ - ள்.) நின்னை பெரிதும் அறிவன் - நான் மிகவும் நன்றாக உன்னை உணர்வேன், நின்முறையள் ஆய கன்னியை - நினக்கு மைத்துனி முறைமையினையுடையளாகிய ஒரு கன்னியை, பிறன் ஓர் காளை எய்துவது கண்டும் - அயலானாகிய ஓர் இளைஞன் திருமணஞ் செய்துகொள்ளுதலைப் பார்த்தும் (அதனைத் தடுக்க முடியாமல்), மன்னும் மணஇல்உள் - அம்மணமக்கள் பொருந்திய அத்திருமண வீட்டிலேயே, வயிறுஆர அயில்கின்றாய்க்கு - வயிறு நிரம்புமாறு தின்னுகின்ற நினக்கு, புதிய - புதியனவாகிய மானமும் மறமும், இன்னும் உளவோ என்று மிக நக்கான் - இன்னும் இருக்கின்றனவோ என்று கூறி மிகுதியாக எள்ளி நகையாடினான், (எ - று.) மானங்கெட்டவனாகிய நினக்கு வேறு எத்தகைய பெருமையுள்ளது என்று அரிசேனன் இப்பாட்டால் வியாக்கிரரதனை இகழ்கின்றான். 1285 முதல் 1294 வரையுள்ள பாடல்கள் பத்தும் சில ஏட்டுப்பிரதிகளில் இல்லை. வியாக்கிரரதன் சடிமன்னனுடைய மருகன் ஆதலால் சுயம்பிரபையை அவனுக்கு மைத்துனி என்றும் அவளை அயலான் நுகர்தல் கண்டும் உண்டு உயிர்க்கின்றான் என அரிசேனன் இகழ்கின்றான். அயலான் என்றது பிறப்பானும் உறவானும் அயன்மையுடைய திவிட்டனை. | ( 156 ) | | |
|
|