பக்கம் : 807
 

வியாக்கிரரதன் விடையிறுத்தல்

1287. கன்னியர்தம் பான்மைவழி செல்பவது கண்டாய்
முன்னிய மொழிப்புலவர் நூன்முறைமை யேடா
வன்னதறி யாதவ னயக்கிரிவ னன்றே
யென்னையறி யாமைநினக் கின்னுமுள தென்றான்.
 
     (இ - ள்.) ஏடா - அடே அரிசேனா!, கன்னியர் தம்பான்மைவழி செல்ப -
மணமாகாத பெண்கள் தம் ஊழ்முறைப்படியே திருமணம் நடத்தப் பெறுவார்கள், அது
முன்னிய மொழிப்புலவர் நூன்முறைமை - அச்செயல் நூல்களை ஆராய்ச்சி செய்த
அறிஞர்கள் நூலினிடத்தே வகுத்துரைத்த முறைமையாகும், கண்டாய் - இதனை நீ
உணர்ந்துகொள், அன்னது அறியாதவன் அயக்கிரிவன் - அச்செய்தியை
உணர்ந்துகொள்ளாதவன் குதிரைக் கழுத்தனான அச்சுவகண்டனே, என்னை அறியாமை -
என் பெருமைகளை யெல்லாம் உணர்ந்துகொள்ளாமை, நினக்கு இன்னும் உளது என்றான் -
உனக்கு இன்னும் இருக்கின்றது என்று கூறினான், (எ - று.)

ஊழ்முறையை உணர்ந்து கொள்ளாமை அச்சுவக்கிரீவனுக்கு இருக்கிறது; என்னைப்பற்றித்
தெரிந்துகொள்ளாமை நினக்கு இருக்கிறது என்று வியாக்கிரரதன் கூறினான். இன்னும்
நினக்கு எத்தகைய அறியாமையுளது என்றான் எனினுமாம்.
 

( 157 )

இருவரும் போர்செய்யத் தொடங்குதல்

1288. வாயுரை யிருக்கநம் வாளினொளி வாயாற்
றீயுரை செகுத்துமலை கென்றுசெயிர் கொண்டு
காயெரி விழித்தனர் களித்தனர் தெளிர்த்தார்
மாயிரு விசும்பிடை மடுத்துமலை குற்றார்.
 
     (இ - ள்.) வாய்உரை இருக்க - நாம் வாயினால் வீணாகப் பேசிக்கொள்ளும்
சொற்போரானது இத்துடன் முடியட்டும், வாளின் ஒளிவாயால் - வாட்படையினுடைய ஒளி
தங்கிய வாயினாலே, தீஉரை செகுத்து - தீமொழிகள் பேசுவதை நிறுத்திவிட்டு, மலைக
என்று - போரைத் தொடங்குவோம் என்று, செயிர்கொண்டு - சினமடைந்து, காய்எரி
விழித்தனர் - காய்கின்ற தீப்போல ஒருவரை ஒருவர் விழித்துப் பார்த்தார்கள், களித்தனர்
- மகிழ்ச்சிகொண்டார்கள், தெளிர்த்தார் - ஆரவாரஞ் செய்தார்கள், மாஇரு
விசும்பிடை - மிகப்பெரிய விண்ணிடத்திலே, மடுத்து - தாவிப்பாய்ந்து எதிர்த்து,
மலைகுற்றார் - போர் செய்யலானார்கள், (எ - று.)