பக்கம் : 809 | | இருவரும் கையில் ஒளியுடைய படைகளுடன் காற்றாடிபோன்று சுற்றுதல் உலகத்தை அழிக்கக் கருதிச் சுழல்கின்ற ஓர் ஆழிப்படையைப் போன்று தோன்றிற்று என்க. | (160) | | 1291. | ஓவிலயில் வீசுமொரு வன்னதுவி லக்குங் காவலொடு மீளுமொரு வன்னவர் கருத்தி னாவதது வன்றியய னின்றவர்கள் காணும் பாவனைய ரல்லர்பல பாடியினி யென்னோ. | (இ - ள்.) ஒருவன் ஓவு இல் அயில் வீசும் - அவ்விருவருள் வைத்து ஒரு மறவன் ஒழிவில்லாமல் வேற்படைகளை எறியா நிற்பன், ஒருவன் - மற்றொருவன், அது விலக்கும் காவலொடு மீளும் - அப்படை ஏற்றைத் தன்மேற் படாதவாறு விலக்கி ஓம்புவதொரு எண்ணத்தோடே மீண்டு வருவன், அன்னவர் கருத்தின் ஆவது அதுவன்றி - அம்மறவர் கருதியவண்ணம் அப்போர் நிகழ்வதன்றி, அயனின்றவர்கள் - பக்கத்தே நிற்போர், காணும் பாவனையர் அல்லர் - இவர் இவ்வாறு போர் புரிகின்றனர் என்று காணுதற்குரிய தன்மையர் அல்லர், பலபாடி இனி என்னோ - அவர் பெருமையை யாம் பலபடக் கூறினும் கூறவியலாதாம், (எ - று.) பாவனை - கருதல். பாடி - கூறி. அவ்வீரர்கள் ஆற்றிய போர் அவர்கள் கருதியபடி நிகழ்ந்ததென்று கூறுவதன்றி அயனின்றோர் அப்போர் இவ்வாறு நிகழ்ந்தது என்று கண்டுகூற வியலாதபடி மிக விரைவாக நிகழ்ந்தது என்க. | ( 161 ) | | 1292. | கொந்தெரி யிரும்பெறிஞர் கொற்செய்கள னொத்தும் வந்துவன வேங்கைமலர் கால்சிதர்வ போன்று நுந்தியவர் வீசுமொளி வாணுதிக டாக்கிச் சிந்தின தழற்பொறி சிதர்ந்ததிசை யெல்லாம். | (இ - ள்.) இரும்பு எறிஞர் - இரும்பினை அடிக்கும் கொல்லர் களுடைய, கொற்செய் - கொல்லுத் தொழிலைச் செய்தற்குரிய கொந்து எரிகளன் ஒத்தும் - கொத்தாகத் தீ எரிகின்ற உலைக்களத்தைப் போன்றும், வனவேங்கை மலர் கால் வந்து சிதர்வ போன்றும் - காட்டின் கண்ணுள்ள வேங்கை மரத்தின் மலர்கள் பெருங்காற்றின் வருகையாலே சிதறுண்டாற்போன்றும், நுந்தியவர் - போர்த்தொழிலைச் செலுத்தும் அம்மறவர், ஒளி வீசும் வாள் நுதிகள் தாக்கி - ஒளிவீசுகின்ற வாளின் வாய்கள் ஒன்றோடொன்று தாக்கப் பெற்று, சிந்தின - தெறித்த, தழற்பொறி - தீப்பொறிகள், திசை யெல்லாம் சிதர்ந்த - திக்குகள் எல்லாம் சிதறா நின்றன, (எ - று.) | | | |
|
|