வேள்வியாசிரியன் அமைச்சர் ஆகியோர் அமர்ந்த பிறகு சிற்றரசர்கள் தங்கள் முடி பயாபதி மன்னனுடைய அடிகளிற் படுமாறு பணிந்து அரசனாற் குறிப்பிடப்பட்ட இடங்களில் அமர்ந்தார்கள். கழலை மணிமுடி நுதியில் தீட்டலாவது சிற்றரசர்கள் பணியும்போது அவர்களுடைய முடி அரசனுடைய வீரக்கழலிற்பட்டுத் தேய்த்தல். ‘ஒன்னலர் மணிமுடி யுரிஞ்சு தாளினான்‘ என்பது நைடதம். “கோவுடை நெடுமணி மகுட கோடியால், சேவடியடைந்த பொற் கழலுந் தேயுமால்“ என்பது கம்பராமாயணம். |
( 28 ) |
படைத்தலைவர்கள் உடனிருத்தல் |
98. | வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான் விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; 1வென்றி நீரார்; எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார் உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே. |
(இ - ள்.) ஓடைமால் களிற்றினான் - நெற்றிப்பட்டத்தையணிந்த ஆண்யானையையுடைய பயாபதி மன்னன்; வழிமுறை பயின்றுவந்த மரபினார் - வழிவழியாகப் பழகிவந்த பழைமையை உடையவர்கள்; மன்னர் கோமான் - அரசர்க்கரசனாகிய தனது; விழுமலர் அடிக்கண் - சிறந்த தாமரை மலர்போன்ற திருவடிகளிடத்திலே; மிக்க அன்பினார் - மிகுந்த அன்பையுடையவர்கள்; வென்றி நீரார் - வெற்றித்தன்மையே பொருந்தியவர்கள்; எழு வளர்த்து அனைய தோளார் - இரும்புத்தூணை வளர்த்தாற் போன்று விளங்குந் தோளையுடையவர்கள்; இளையவர் - அகவையிற் சிறியவர்கள்; இன்னநீரார் - இத்தன்மை பொருந்தியவர்களான படைத்தலைவர்கள், உழையவர் ஆக வைத்தான் - தன்னுடைய பக்கத்திலே இருக்கும்படியாகச் செய்தான். (எ - று.) வென்றிநீரார் என்பதற்குப் புலன்களை வென்ற தன்மையை உடையவர்கள் என்றுரைப்பினுமாம். அவ்வக் காலங்களிற் சேர்க்கப்படாமல் தொன்றுதொட்டு வழிமுறையாக வருதல் படை வீரர்கட்குச் சிறப்பாகையால் அதனை முதலிற் கூறினார். |
|
|
(பாடம்) 1. வென்ற நீரார். சூ. 6. |