பக்கம் : 811
 
     அரிசேனன் இறந்தமை தெரிந்தால் அச்சுவகண்டன் என் செய்யுமோ என்று அமரர் அஞ்சி ஓடினர் என்க. சடியின் மருகனாதலின், வியாக்கிரரதனை நெடிய மாற்கிளைய காளை என்றார்.

(164)

அரிசேனன் வீழ்ந்தவுடன் அவன் படைஞர் நிலைமை

1295. அழலான்பெய ரவன்மைத்துன
     னரிசேனனை யெறியக்
கழலான்கட லொளியான்றமர்
     கலந்தார்த்தனர் கரிய
நிழலான்றமர் கரிந்தார் சில
     ரிரிந்தார்பலர் நெரிந்தார்
தழலாரயில் வலனேந்துபு
     சார்ந்தார்தலை சரிந்தார்.
 
     (இ - ள்.) அழலான் பெயரவன் மைத்துனன் - அருக்க கீர்த்தியின் மைத்துனனாகிய வியாக்கிரரதன், அரிசேனனை எறிய - அரிசேனனைக் கொன்றவுடைனே, கழலான் - வீரக்கழலை அணிந்தவனும், கடல் ஒளியான் -கடல் வண்ணனுமாகிய திவிட்டனுடைய, தமர் - படைஞர்கள், கலந்து ஆர்த்தனர் - கூடி ஆரவாரித்தனர், கரிய நிழலான் தமர் - கருநிறமுடையவனாகிய அச்சுவகண்டனுடைய படைஞர்கள், சிலர் கரிந்தார் - சிற்சிலர் உளம் கருகினர், பலர் இரிந்தார் - பலர் புறங்கொடுத்தோடினர், நெரிந்தார் பலர் இறந்தார், தழல்ஆர் அயில்வலன் ஏந்துபு சார்ந்தார் - தீக்காலும் வேற்படையை வலக்கையின் ஏந்தி வியாக்கிரரதனை எதிர்த்தெய்தின பல மறவர்கள், தலை சரிந்தார் - தலைகள் வீழப்பெற்றார்கள், (எ - று.)

     அரிசேனன் மாண்டமை கண்டு திவிட்டநம்பியின் படைஞர் மகிழ்ந்து ஆரவாரித்தனர். அச்சுவகண்டன் படையிலுள்ளோர் இரிந்தாரும், நெரிந்தாரும், தலை சரிந்தாரும் ஆயினர் என்க.

(165)

 
1296 அரிசேனனங் கழிவாதல்கண் டயில்வாளொளி மிளிரா
விரிசீர்வட்ட மிகுகேமடஞ் சுழலாநகு வருவான்