பக்கம் : 813
 

     போர் செய்யப்புகும் மறவர்கள் தங்கள் அரசற்கு வெற்றி சிறக்க என வாழ்த்துதல்
மரபு. இம்மரபினைப் பின்னரும் காணலாம். புகரும் - உம் : இசைநிறை.
 

( 167 )

இந்திர காமன் போர்க்கு வருதல்

1298. அருக்க கீர்த்திதன்
பெருக்கம் வாழ்த்தியே
திருக்கை வேலினா
னெரிக்கு மாற்றலான்.
 
     இது முதல் மூன்று செய்யுள்கள் குளகம்

     (இ - ள்.) அருக்க கீர்த்தி தன் - அருக்க கீர்த்தியினுடைய பெருக்கம் வாழ்த்தியே -
சிறப்புக்களைப் புகழ்ந்து வாழ்த்திக்கொண்டு, திருக்கை வேலினான் - அழகிய கையிலே
வேற்படையேந்தியவனாய், எரிக்கும் ஆற்றலான் - பகைவரைச் சுட்டெரிக்கும் பேராற்றல்
உடையான், (எ - று.)

     எரிக்கும் ஆற்றலான் “முன்னிவந்தனன்“ என அடுத்த செய்யுளில் முடியும். இங்கு
வருபவன் இந்திரகாமன் என்பவன் ; இவன் திவிட்டன் படையைச் சேர்ந்தவன் ;
அப்படைக்கு அருக்ககீர்த்தி தலைவனாதலாலும் விச்சாதரனாகிய தனக்கு அருக்ககீர்த்தி
அரசனாதலாலும், இவன் அருக்ககீர்த்தியை வாழ்த்திப் புகுந்தான் என்க.
 

( 168 )

 

1299. 1பொன்னங் குன்றவன்
மின்னும் வாளினன்
மன்னன் றோழனாம்
முன்னி வந்தனன்.
 
     (இ - ள்.) மின்னும் வாளினன் - சுடரும் வாளையுடைய, பொன்னங்குன்றவன் -
சக்கிரவாளத் தலைவனாகிய, மன்னன் தோழனாம் - அருக்க கீர்த்தியின் அன்பனாவான்,
முன்னி வந்தனன் - போரின்கண் முற்பட்டு வந்தான், (எ - று.)
இந்திரகாமன் அருக்க கீர்த்தியின் நண்பன். பொன்னங்குன்று - இமயமலை. ஈண்டு
அம்மலையின் ஒரு பகுதியாகிய இரதநூபுரச் சக்கிரவாளத்தை உணர்த்திற்று.
 

( 169 )


     (பாடம்) 1 பொன்னுங்.