பக்கம் : 815 | | இந்திரகாமன் குணசேனனுடைய தோளில் ஒன்றை வெட்டி வீழ்த்தினானாக அக்குணசேனன் இந்திரகாமனுடைய தோளை வெட்டும் பொருட்டு எஞ்சிய ஒரு கையால் வாளை வீசினன் என்க. | ( 172 ) | குணசேனனைக் கொல்லுதல் | 1303. | இட்ட வாள்கர மொட்டித் தட்டிப்பி னட்ட மாகென வெட்டி 1வீழ்த்தினான். | (இ - ள்.) இட்டவாள் கரம் ஒட்டித் தட்டிப்பின் - குணசேனன் வீசிய வாளை அவன் கையாற்பற்றிய இடத்தே தன் கிடுகாலே தடுத்து, நட்டம் ஆகென - இவன் உயிரிழக்கக்கடவன் என்று, வெட்டி வீழ்த்தினான் - அக்குணசேனன் தலையைத் தன் வாளாலே வெட்டித் தள்ளினான், இந்திர காமன், (எ - று.) குணசேனன் வீசிய வாளைத் தன் கிடுகினாற் றடுத்து அவனுடைய தலையை இந்திர காமன் வெட்டி வீழ்த்தினான் என்க. | ( 173 ) | வரசேனன் போர்க்கு வருதல் | 1304. | குணசேனன் வீழக் கண்டு கூற்றினுங் கொடிய நீரா னிணைசேனை 2தன்னு ளுள்ளோ னியம்பிய களிப்பின் மிக்கான் கணைசேர்ந்த தூணித் தோளான் கைச்சிலை பிடித்துக் கொண்டு திணைசேர வருக வென்று வரசேனன் றிகழ்ந்து நின்றான். | (இ - ள்.) குணசேனன் வீழக்கண்டு - குணசேனன் என்பான் மடிந்து வீழ்ந்தமை கண்டு, இணைசேனை தன்னின் உள்ளோன் - பொருந்திய அச்சுவகண்டன் சேனையில் உள்ளவனாகிய வீரன், வரசேனன் - வரசேனன் என்னும் பெயருடையோன், கூற்றினும் கொடிய நீரான் - மறலியினும் மிக்க கொடுமையுடையோன், இயம்பிய களிப்பின் மிக்கான் - மறவுரைகளை வழங்குகின்ற வீரச் செருக்குமிக்கவன், கணைசேர்ந்த தூணித் தோளான் - கணைகள் செறிக்கப்பட்ட அம்புக்கூட்டையுடைய தோளையுடையவன், கைச்சிலை பிடித்துக்கொண்டு - தனது இடக்கையிலே வில்லைப் பற்றிக்கொண்டு, திணைசேர வருக என்று - போர்க்களத்தே என்னோடு போர் செய்தற்கு எல்லீரும் ஒருங்கு சேர்ந்து வாருங்கோள் என்று அறை கூவியவனாய், திகழ்ந்து நின்றான் - ஆற்றலால் விளக்கமுற்று நிற்பானாயினான், (எ - று.) | |
| (பாடம்) 1வீழ்த்தினன், வீழ்த்தனன். 2தன்னுளுண்டோ - வியம்பிய களிப்புமாகி. | | |
|
|