பக்கம் : 817 | | (இ - ள்.) அவன் வில்லொரு கையின் ஏந்தி - அவ்வாறு வந்த காமுகன், தன் ஒரு கையிலே வில்லைப்பற்றி, குழைய வாங்கி - மிக வளைத்து, வெங்கணை - வெவ்விய அம்புகளை, சொல்லரு மாரிபோல - சொல்லுதற்கரிய மழைத்தாரைகளைப் போன்று, தொடுத்து விடுத்தலோடு - மிகுதியாகத் தொடுத்து ஏவியவுடனே, மல்உறு காளை - மற்போரிலே ஆற்றல்மிக்க அவ்வரசேனனும், தன்மேல் வராமலே விலக்கியிட்டு - தன்னுடலிலே படாதபடி அக்கணைகளைத் தன் கணைகளாலே விலக்கி, கல்லெனக் கலங்கி வீழ - ஆண்டுத் தன்னெதிர் நின்ற படைகள் கல்லென்று இரைந்து உளம் கலங்கி அழிந்துபோம்படி, கைச்சிலை கணையேறிட்டான் - தன்னுடைய கையிற்பற்றிய வில்லினின்றும் கணைகளை வீசினான், (எ - று.) காமுகன் வில்லை நன்றாக வளைத்து வரசேனன் மேற் சொரிந்த கணைகளை எல்லாம் அவன் தடுத்துக்கொண்டு மேலும் தன் பகைப்படைகள் கலங்கி வீழும்படி அம்புகளை ஏவினான் என்க. | ( 176 ) | வரசேனன் மாளுதல் | 1307. | கார்செயன் முழங்கி யார்ப்பக் காளையுங் கனன்று மிக்க வார்சிலை வணங்க வாங்கி வாய்புக விடுத்த லோடும் போர்செயுங் களத்து வீழ்ந்தான் புகழ்வர சேன 1னென்னத் தார்செய்தா னவர்க டம்முட் டானவ னொருவன் வந்தான். | (இ - ள்.) கார் செயல் முழங்கி ஆர்ப்ப - முகிலின் செயலைப் போன்று கணைகளைப் பொழிந்து மேலும் அம்முகில் முழங்கினாற் போலே வரசேனன் ஆரவாரம் செய்தானாக, காளையும் கனன்று - காமுகனும் வெகுண்டு, வார்சிலை மிக்க வணங்க வாங்கி - தனது நீண்ட வில் மிகையாகக் குனியும்படி வளைத்து, வாய்புக விடுத்தலோடும் - முழங்கிய வரசேனனுடைய வாயின் கண்ணே புகும்படி ஒரு கணையை ஏவியவுடனே, போர் செயும் களத்து வீழ்ந்தான் - போர் ஆற்றிய களத்திலே மடிந்து வீழ்ந்தான், புகழ்வரசேனன் என்ன - மறவராற் புகழப்படுகின்ற வரசேனன் என்னும் பூசல் உண்டாயிற்றாக, தார் செய் தானவர்கள் தம்முள் - மாலையணிந்த வித்தியாதரரூடே உள்ள, தானவன் ஒருவன் வந்தான் - ஒரு வீரனாகிய வித்தியாதரன் போர் மேற்கொண்டு வருவானாயினன், (எ - று.) கொடிய அம்புகளை மழைபோலச் சிதறி முகில்போல முழங்கிய வரசேனன் வாயின்கண் காமுகன் ஒரு கணையைப் பாய்ச்சி அவனைக் கொன்று வீழத்தினான் ; உடனே மற்றொரு விச்சாதரன் போர்க்கு வந்து சேர்ந்தான் என்க. | ( 177 ) |
| (பாடம்) 1 னென்றே. | | |
|
|