பக்கம் : 823 | | (இ - ள்.) இடுவானை - அவ்வாறு மார்பு ஊடுருவச் சூலம் வீசிய அரிகேதனனை, அ இடு சூலமொடு - அந்தப் பாய்ச்சிய சூலப்படையோடே, உடலும் இரு துணியாப்பட - அவனது உடலும் இரண்டு துண்டுகளாம்படி, அயில்வாள் வீசினன் - சார்த்தூலகன் தனது கூரிய வாளாலே வீசினான், அது படலும் - இவ்வாள் அவனுடலிற் பட்டவுடனே, பலமாயன் - பல்வேறு மாயங்களையுடைய அரிகேதனன், வாய்மையின் அடை உருவம் முதலதுவே தனது ஆக - மாயத்தாலே பல்வேறு உருவங்களைக் கொண்டு போர் செய்தானேனும் உண்மையாகவே அவன் அடைந்துள்ள முதல் வடிவமே தனக்கெஞ்சி நின்றதாக அவ்வுருவத்தோடே, தடமால்வரை என வீழ்தலும் - வலிய பெரிய மலைமறிந்து வீழ்ந்தாற்போல வீழ்ந்தவுடனே, தமர் உடைவார் ஆனார் - அவ்வரிகேதனன் படைஞர் புறமிட்டு ஓடுவாராயினர், (எ - று.) சூலத்தால் தன் ஆகந் துளையிட்ட அரிகேதனனைச் சார்த்தூலகன்றன் வாளால் வெட்டி வீழ்த்தினான் : அப்பொழுது அவ்வரிகேதனன் படைஞர் புறங்கொடுத்து ஓடலாயினர், என்க. | ( 186 ) | தூமகேதனன் போர்க்கு வருதல் | 1317. | வாழுநா ளுலந்து மற்றவன் மண்மேல் மலையென மறிதலு மலைமே லாழியான் றமர்க ளஞ்சினா ரஞ்சு மாயிடை யடுதிற லுடையா னூழிநா ளெரியுங் கூற்றமு முருமு மொப்பவன் கைப்படை நவின்றான் சூழிமா லியானைத் 1துளைமதஞ் செறிப்பத் தோன்றினான் றூமகே தனனே. | (இ - ள்.) வாழும் நாள் உலந்து - தான் வாழும் நாள் முடிந்து விட்டமையானே, மற்றவன் - அவ்வரிகேதனன், மலையென மண்மேல் மறிதலும் - மலைபுரண்டாற் போன்று மண்ணின்மேல் பிணமாய்ப் புரண்டவுடனே, மலைமேல் ஆழியான் தமர்கள் - உத்தரசேடியின்கண் வதியும் அச்சுவகண்டன் படைஞர்கள், அஞ்சினார் - பெரிதும் அஞ்சுவாராயினார், அஞ்சும் ஆயிடை - அவ்வாறு அவர்கள் அஞ்சும்பொழுது, அடுதிறல் உடையான் - பகைவரைக் கொல்லும் ஆற்றல் மிக்கவனும், ஊழிநாள் எரியும் - ஊழிக்காலத்தே உலகினை அழிப்பதாகிய தீயும், கூற்றமும் - மறலியும், உருமும் - இடியேறும், ஒப்பவன் - போன்றவனும், கைப்படை நவின்றான் - கையின்கட் படைகளை மேற்கொண்டவனும், துளை மதம் செறிப்ப - மூவகைத் தொளையின் வழியாக மதநீர் நிறைந்து வழியும், சூழிமால் யானை - முகபடாமுடைய யானையின் மிசையேறி ஊர்பவனுமாய், தூமகேதனன் தோன்றினன் - தூமகேதனன் என்பான் வந்து தோன்றலானான், (எ - று.) | ( 182 ) |
| (பாடம்) 1 துணை. | | |
|
|