பக்கம் : 825
 
 
தூமகேதனனைச் சுவலனரதன் எதிர்தல்
1319. வண்டினம் பாடு மாலையன் 1விசித்த
     கச்சினன் வயிரப்பூ ணிரைத்த
தண்டினன் கழலன் றமனியத் தாரான்
     சார்ந்தனன் சார்தலு மவனைக்
2கண்டன னன்றே கடலொளி மேனிக்
     காளைதன் மாமனுக் கிளையான்
உண்டினி நமக்கோர் போரென வெதிரே
     யுவந்துசென் றவர்க்கிவை யுரைத்தான்.
 
      (இ - ள்) வண்டினம் பாடும் மாலையன் - வண்டுகள் இசைபாடும் மாலையை
அணிந்தவனாய், விசித்த கச்சினன்-கட்டிய கச்சினையுடையனாய், வயிரப் பூண் நிரைத்த
தண்டினன் - வயிரமணிப் பூண்களை நிரலாகச் செறித்த தடியை உடையவனாய், கழலன்
- வீரக்கழல் அணிந்தவனாய், தமனியத்தாரான் - பொன்மாலை பூண்டவனாய்,
சார்ந்தவன் - வந்தவனாகிய அத்தூமகேதனன் என்பான், சார்தலும் - அவ்வாறு வந்து
நின்றவுடனே, கடல் ஒளி மேனிக் காளை தன் மாமனுக்கு இளையான் - கடல் போன்ற
நீல ஒளிபரப்பும் திருமேனியையுடைய திவிட்டன் மாமனாகிய சடியரசன் தம்பியாகிய
சுவலனரதன் என்பான், அவனைக் கண்டனன் அன்றே - அத்தூமகேதனனைக் கண்டான்,
இனி - இப்பொழுது, நமக்கு - எனக்கு, ஓர் போர் உண்டு என - ஒரு சிறந்த போர்த்
தொழில் கிடைத்தது என்று, உவந்து - மிக மகிழ்ந்து, அவற்கு எதிரே சென்று -
அத்தூமகேதனனுக்கு முன்னர்ச் சென்று, இவை உரைத்தான் - இம்மொழிகளைக்
கூறுவானானான்.

     தூமகேதனனைக் கண்ட சுவலனரதன் என்பான் சிறந்த போர் ஒன்று நமக்கு
வாய்த்தது என்று மகிழ்ந்து அவன் முன்னர்ச் சென்று பின்வருமாறு கூறினன், என்க.
 

( 189 )

1320.தூமகேதனனைச் சுவலனரதன் அசதியாடல்
     மலையெடுத் திடுவாய் மாநிலம் பிளப்பாய்
மறிகட லறவிறைத் திடுவாய்
     உலைமடுத் துலகம் பதலையா வூழித்
தீமடுத் துயிர்களட் டுண்பாய்
 
     (பாடம்) 1 வரித்த கச்சையன். 2 கண்டிலனன்றே, கண்டலனன்றே.