பக்கம் : 828
 

     பேசுபவர் ஆகார், என்றனன் - என்று சுவலனரதன் உரைத்தான், எனலும் -
உரைத்தவுடன், எதிர்தெழித்து - இவ்வுரைக்கு எதிராக உரப்பி, அவனும் எழுந்தனன் -
தூமகேதனனும் போர்க்கு எழுந்தான், இவனும் எழுந்தனன் - சுவலனரதனும் போர்க்கு
எழுந்தான், அன்று போர் மலைந்தார் - அற்றை நாள் இருபெருமறவரும் போர் ஆற்றினர்,
இவ்வுலகம் அதிர்ந்தது - இம்மண்ணுலகம் நடுங்கிற்று, அரசரும் அமர் ஒழிந்து நின்றார் -
அப்போர்க்களத்தே இடந்தொறும் போராற்றி நின்ற இரு திறத்து வேந்தரும் தத்தம்
போர்த்தொழிலை நிறுத்தி இவர் போரைப் பார்த்துக்கொண்டு நிற்பாராயினர், (எ - று.)

மீண்டும் சுவலனரதன், அடே தூமகேதனா! வீரரானவர் இவ்வாறு வாயைப் பிளந்துகொண்டு
தற்புகழ் பேசுவரோ என்று இகழ்ந்தானாக, தூமகேதனன், அவனை உரப்பியவனாய்ப் போர்
தொடங்க இவனும் தொடங்கினான்; அப்போது பூமி நடுங்கிற்று; போர்செய்த மற்றைய
அரசர் தம் போரை நிறுத்தி இவர்கள் போரைக் கண்டு வியந்து நிற்பாராயினர், என்க.
 

( 192 )

இதுவுமது

1323. ஆர்த்தன திசைக ளதிர்ந்ததிவ் வுலக
     மலைகடல் கலங்கின விருளாற்
போர்த்தது விசும்பு புலம்பின விலங்கல்
     புரண்டன பொருவரைத் துறுகற்
1சார்த்தினர் புடைக்குந் தண்டின ரெதிரத்
     தாங்கியும் வாங்கியுந் தடுத்தும்
வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால்
     விசும்பினை மயங்கவே திரிந்தார்.
 
     (இ - ள்.) திசைகள் ஆர்த்தன - அப்பொழுது திக்குகள் எதிரொலி செய்தன,
இவ்வுலகம் அதிர்ந்தது - இப்பூமி நடுங்கிற்று, அலைகடல் கலங்கின - அலையையுடைய
கடல்கள் கலங்கின, இருளால் விசும்பு போர்த்தது - இருளினாலே விண் மறைபட்டது,
விலங்கல் புலம்பின - மலைகள் எதிர்ஒலி செய்தன, பொருவரைத் துறுகல் - பொருந்திய
மலைகளினிடத்தே உள்ள குறுங்கற்கள், புரண்டன - உருண்டு வீழ்ந்தன, சார்த்தினர்
புடைக்கும் தண்டினர் - ஒன்றோடு ஒன்று பொருத்திப் பின்னர்த் தாக்கும்
தண்டையுடையராய், எதிரத்தாங்கியும் - நேர்நின்று ஏந்தியும், வாங்கியும் - மீளப்
பின்புறமாக இழுத்தும், தடுத்தும் - ஒருவர் தாக்குங்கால் ஒருவர் தடுத்தும், மெய்யால்
வேர்த்தனர் - உடல் வெயர்த்தார், மனத்தால் வெதும்பினர் - மனம் புழுங்கினர்,
விசும்பினை மயங்கவே திரிந்தார் - விசும்பெங்கும் பொருந்தச் சுற்றினர், (எ - று.)
 


     (பாடம்) 1 சார்த்திரள்.