பக்கம் : 829 | | மெய் ஆல் : மனம் ஆல் - ஆல் இரண்டும் அசைகள். விசும்பினை : வேற்றுமை மயக்கம். திசைகள் எதிரொலி செய்யவும், பூமி அதிரவும், கடல் கலங்கவும் துறுகல் புரண்டு வீழவும், தண்டாற் புடைத்தும், தாங்கியும், வாங்கியும், தடுத்தும், உடல் வெயர்க்க மனம் வெம்ப விசும்பில் திரிந்தனர்; என்க. | ( 193 ) | இதுவுமது | 1324. | 1கண்டவர்க் கெல்லாங் கண்ணுளார் போல்வார் காண்டலுக் கரிதவ ருருவம் தண்டின 2தொலியுந் தங்களார்ப் பிசையுந் தயங்குதா 3ராரமும் விரவி எண்டிசை மருங்கு மிடைநிலத் திடையு மிருள்கெழு விசும்பின தகமுங் கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல் கூற்றமுந் தலைபனித் ததுவே. | (இ - ள்.) கண்டவர்க்கு எல்லாம் - தம்மைப் பார்த்தோர்க்கெல்லாம், கண்ணுளார் போல்வார் - அவரவர் கண்களிடத்தே உள்ளாரைப் போன்று அணுக்கராய்க் காணப்படுவர், அவர் உருவம் காண்டலுக்கு அரிது - விரைவு மிகுதியால் அவ்வீரர்களுடைய உருவங்கள் நன்கு காண்பதற்கு அரியவாயின, தண்டினது ஒலியும் - அவர்கள் பற்றியுள்ள தடிகள் தாக்கும் முழக்கமும், தங்கள் ஆர்ப்பிசையும் - அவ்வீரர்தாமே ஆரவாரிக்கும் முழக்கமும், தயங்குதார் ஆரமும் - திகழ்கின்ற மணிவடங்களும் முத்தாரங்களும், விரவி - கலந்து, எண்டிசைமருங்கும் - எட்டுத் திக்குகளிடத்தும், இடைநிலத்து இடையும் - இவற்றிடைப்பட்ட நிலத்தின் மீதும், இருள்கெழு விசும்பினது அகமும் - இருள் செறிந்த வானத்தினும், சிலம்பு கொண்டன - பெருமுழக்கம் செய்தன, விலங்கல் குலுங்கின - மலைகள் அசைந்தன, கூற்றமும் தலைபனித்தது - மறலியும் அச்சத்தால் தலைநடுக்கமுற்றான், ஏ : அசை, (எ - று.) தம்மைப் பார்த்தவர்கள் கண்களூடே உள்ளார் போல்வர், அவர் உருவம் காண்டற்கரிய, கூற்றமும் நடுங்கிற்று என்க. | ( 194 ) |
| (பாடம்) 1கண்டிவர்க். 2தொளியர். 3ரார்வமும். | | |
|
|