பக்கம் : 83
 
முகப்பெயரின் ஆயபூ என்றது - திருமுகமாகிய மலரினது என்றவாறு. அரசன்
மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும்போது, பரிசில் வேண்டிய புலவர்கள்அரசனைப் புகழ்ந்து
பாடிக்கொண்டு அடைந்த செய்தி இப்பாட்டிற் கூறப்பட்டது. இப்புலவர்கள் எப்போதும்
அரசன் மாட்டிருந்து புகழ் பாடுவோரல்லர் என்பதும் பரிசில் விரும்பி வந்தவரென்பதும்
புலவர்களை வண்டுகளாக உருவகப்படுத்தியமையின் விளங்கும். பயாபதிக்குக் கற்பகமும்,
அவன் முகத்திற்குக் கற்பக மலரும் நாவலர்க்கு வண்டும் உவமைகள். புலமயம் -
புலன்களின் தன்மை; அறிவின்றன்மையுமாம்.

( 30 )

இசைப் புலவர்கள் வாழ்த்துக் கூறுதல்

100 .பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் 1புலவர் பாடி
2மண்ணமர் வளாக மெல்லாம் 3மலர்ந்தநின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்.
 

     (இ - ள்.) பண் அமை - எழுவகை இசைகளும் அமைந்த; நல்மகரம் யாழ் - நல்ல
மகர வீணையைத் தாங்கிய; பனுவல் நூல்புலவர் பாடி - சிறந்த நூல்களை யுணர்ந்த
புலவர்கள் பலவகைப் புகழ்ப்பாக்களைப் பாடி; விண் அகம் விளங்கு திங்கள் வெண்குடை
நிழலின் வைகி - விண்ணின் கண்ணே விளங்குகின்ற திங்கள் மண்டலத்தைப்போன்ற
ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நீழலிலே தங்கி; கண்அமர் உலகம் காக்கும் -
இடமகன்ற உலகத்திலுள்ள உயிர்த்தொகைகளைப் பாதுகாக்கும்; நின் - உன்னுடைய;
கழல்அடி - மறக்கழலையணிந்த அடிகள்; மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த -
மண் பொருந்திய வளைந்த உலகத்திலெல்லாம் பரவிய; புகழோடு ஒன்றி வாழ்க என்றார் -
புகழோடு பொருந்தி வாழ்க என்று வாழ்த்துக் கூறினார்கள். (எ - று.)

     இச்செய்யுளிற் கூறப்பெறும் யாழ்ப்பனுவல் நூற்புலவர், எப்போதும் அரசன்
மாட்டிருந்து அவன் புகழை யாழிலமைத்து இன்னிசையுடன் பாடும் இசைவாணர் என்க.
பண் - நிறைந்த நரம்புகளையுடைய இராகம். பேரியாழ், மகரயாழ், சகோடயாழ்,
செங்கோட்டியாழ் என யாழ் நான்கு வகைப்படும். மகரயாழ் என்பது மகரமீனின் அங்காந்த
வாய்போல வளைந்த நுனி அமைக்கப்படுதலால் மகரயாழ் என்று பெயர்பெற்ற தென்பர்.
யாழ்ப்புலவர் - வீணைப் பாடகர். வளாகம் - நீர்சூழ்ந்த இடம்.

(31)

     (பாடம்) 1. புலவர் பாட. 2. மண்ணவர். 3. மலர்ந்த நன்.