பக்கம் : 833
 

     என்று கூறி, பொருமாலை வாளன் - போர் செய்யும் தன்மையுடைய வாளை
ஏந்தியவனாய், அணிகேடகத்தன் - அழகிய கிடுகுடையனாய், மணிபோது இலங்கு முடியன்
- மணிகளும் மலர்களும் திகழ்கின்ற முடிக்கலனை உடையவனாய், செருமலை மன்னர்
இறை - வெற்றி மாலை சூடுமன்னர் மன்னனாகிய, தேவசேனன் - தேவசேனன் என்பான்,
சிவந்து எதிரே செல - சினந்து அவ்வழல் வேகனுக்கு எதிரே செல்லா நிற்க, ( )
அழல்வேகன் - அச்சுவகண்டனைச் சேர்ந்தவன்; தேவசேனன் - சடிமன்னன் மைத்துனன்.
அழல்வேகன் வருகையைக் கண்டு தேவசேனன், இவன்றான் அழல்வேகன் என்னும்
புகழ்பெற்ற வீரன் போலும், அவனாயின் நன்று அவனோடு யானே எதிர்ப்பேன் என்று
சிவந்து எதிரே வந்தான் என்க.
 

( 198 )

அழல்வேகன் தேவசேனனை இகழ்ந்து அச்சுறுத்தல்

1329. மலைமேலு மென்னை மதியாது வாழ்தி
     மனிசர்க்கு வந்து படையாய்
நிலமேலு நின்று பொருவா னினைந்து
     வருவாய் நினக்கி 1துறுமே
சலமேலு மின்ன வுடையாயை வென்று
     தலைகொண்ட பின்னை நுமரைக்
குலம்வேர் களைந்து குடிபொன்று விப்ப
     னிதுயான் மகிழ்ந்த குணனே.
 
     (இ - ள்.) மலைமேலும் என்னை மதியாது வாழ்தி - அடே தேவசேனா நீ,
இரதநூபுரச் சக்கரவாளத்தின்மிசை யிருக்கும் பொழுதும் என்னைப் பொருளாக மதியாமல்
செருக்குடனே வாழ்ந்தனை, மேலும், மனிசர்க்குப் படையாய்வந்து - எம்பகைவராகிய எளிய
மானிடர்க்கும் துணைப்படையாய் வந்து, நிலமேலும் நின்று - இந்நிலத்தின் மேலும்
என்னை மதியாது எதிர் நின்று, பொருவான் - போர் செய்ய, நினைந்து வருவாய் -
எண்ணி வந்தனை, நினக்கு இது உறுமே - உனக்கு இது தகுதியாமோ, சலம் மேலும் இன்ன
உடையாயை - வஞ்சனை மேலும் இன்னோரன்ன பல உடையையாகிய உன்னை, வென்று
தலைகொண்ட பின்னை - இற்றைப் போரின்கண்வென்று உன் தலையைக் கைக்கொண்ட
பின்னர், நுமரை - உனது கேளிரை, குலம் வேர் களைந்து - குலத்தோடு வேர்களைந்து,
குடிபொன்றுவிப்பன் - உன்குடி முழுதும் கொன்று அழிப்பேன், இது யான் மகிழ்ந்த குணன்
ஏ - இது யான் மகிழ்வதற்குரிய செயலாகும், (எ - று.)
 


     (பாடம்) 1 துறுமோ.