பக்கம் : 835
 

அவர்களின் போர்த்திறம்

1131. வாள்வீசு மாறும் 1வடிவேலின் வந்த
     வடிவேல் 2விலங்கும் வகையும்
தோள்வீசு மாறு மவைமீளு மாறு
     மிடைசொல்லும் வீர மொழியும்
தாள்வீசு போழ்து கழலோங்கு மாறு
     மெதிர்தாங்க ளார்க்கு மொலியுந்
3நாள்வீய லன்றி யுரைவீய யாவர்
     4நவில்வார் நமக்கு மரிதே.
 
     (இ - ள்.) வாள் வீசும் ஆறும் - இந்த இரண்டு மறவர்களும், தத்தம் வாள்களை
வீசுகின்ற வகையும், வடிவேலின் - வடித்த வேலாலே, வந்த வடிவேல் விலங்கும் வகையும்
- தம் மேல் வந்த வடிவேலை விலக்கா நின்ற வகையும், தோள்வீசும் ஆறும் - தத்தம்
கைகளை வீசுகின்ற வகையும், அவை மீளும் ஆறும் - அக்கைகளை மீள மடக்கும்
விதமும், இடை சொல்லும் வீரமொழியும் - இப்போரிடையே இருவரும் பேசுகின்ற
மறவுரைகளும், தாள்வீசு போழது - கால்களை வீசும்பொழுது, கழல் ஓங்கும் ஆறும் -
வீரக்கழல்கள் உயர்கின்ற வகையும், எதிர் தாங்கள் ஆர்க்கும் ஒலியும் - ஒருவர்க்கொருவர்
எதிர்எதிர் எடுக்கும் ஆர்ப்பொலியும், நாள்வீயல் அன்றி உரைவீய - காலங்
கழிவதொழித்து மொழி முற்றும்படி, யாவர் நவில்வார் - யாரோதான் கூறவல்லுநர் ஆவர்,
நமக்கும் அரிதே - ஆதலால் எமக்கும் கூறல் அருமையாயிற்று, (எ - று.)

தேவசேனனும், அழல்வேகனும் ஆற்றிய போர்த்திறத்தை உள்ளபடி சொல்லப்புகின்,
காலம்மிக வேண்டும் ; எத்தனை காலம் கூறினும், அப்போர்ப் பெருமை முழுதும்
கூறவியலாது, எனவே, எமக்கும் அதனைக் கூறுதல் அரிதே ஆயிற்று ; எனத் தேவர்
கூறினர் என்க.
 

( 201 )

 

1132. மாலா லெதிர்ந்து மலைவாயை நீடு
     பொர5வைப்ப தென்னை யினியென்
வேலா லழிப்ப னெனவே லெறிந்து
     விறல்வேக னார்ப்ப மறவோன்
    
 

     (பாடம்)1 வடிவேலினாலிவ், வேலினாலவ். 2 விளங்கும். 3 நாள் வீசி யின்றி. 4
மொழிவார். 5வேண்டிவைப்ப தினியென்.