பக்கம் : 839
 

     தடுத்து, தேவசேனன் இது மொழியும் - தேவசேனன் இம் மொழிகளைப் பேசினன்,
கைஉற்றது ஒன்று - அடே அழல்வேக! உனக்கு ஒரு கை எஞ்சி உளதாயிற்று, கவலேல் -
கவலைப்படாதேகொள், உனக்கு இது உறுமாறு - உனக்கு இவ்வொரு கையேனும்
உளதாம்படி, போக எனவும் - நீ ஓடிப்போய்விடு என்று கூறிய பின்னரும், மையுற்ற காளை
- மயக்குற்றவனாகிய அழல்வேகன், வருவானை - தன்மேற் போர் செய்யவே
வருகின்றவனை, அம்மறவோன் - அத்தேவசேனன், வாளின் உயிர் வௌவினான் -
வாளாலே கொன்று வீழ்த்தினான், (எ - று.)

ஒரு தோளிழந்து நின்றவனாகிய அழல்வேகனை நோக்கித் தேவசேனன்
இரக்கமுடையவனாய் இவ் வொருகையோடேனும் நீ போய் விடுக என்று மொழிந்தான்,
அழல்வேகன் மையலுற்று மற்றொரு கையால் போர் செய்யப்புகுந்தான் ஆதலின் அவனைக்
கொன்று வீழ்த்தினான் என்க.
 

( 204 )

சுவணகேது போர்க்கு எழுதல்

1335. தாம மார்ந்த மணியைம்பாற்
     றைய றாதை 1மைத்துனனாஞ்
சேம மார்ந்த தனிச்செங்கோற்
     றேவ சேனன் 2கைவாளாற்
சாம வண்ணன் றழல்வேகன்
     சாய்ந்தான் சாய்ந்த 3பொழுதத்தே
தூம மாரங் கமழ்குஞ்சிச்
     சுவண கேது 4தோன்றின னால்.
 
     (இ - ள்.) தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல்தாதை - மலர்மாலை பொருந்திய
நீலமணி போன்ற நிறமுடைய அளகக் கற்றையை உடைய சுயம்பிரபையின் தந்தையாகிய
சடிமன்னனுடைய, மைத்துனன்ஆம் - மைத்துனன் ஆகின்ற, சேமம் ஆர்ந்த தனிச்
செங்கோல் - காவற்றொழில் நன்கமைந்த ஒப்பற்ற செங்கோன்மைச் சிறப்புடைய,
தேவசேனன் - தேவசேனனுடைய, கைவாளால் - கையின் கண்ணதாகிய வாட் படையாலே,
சாமவண்ணன் - இருள்நிறமுடையனாகிய, தழல்வேகன் - அழல்வேகன் என்பான்,
சாய்ந்தான் - இறந்தான், சாய்ந்தபொழுதத்தே - அவன் இறந்து வீழ்ந்தவுடனே, தூமம்
ஆரம்கமழ் குஞ்சி - நறுமணப்புகையும் சந்தனமும் கமழ்கின்ற தலைமயிரையுடைய,
சுவணகேது - சுவணகேது என்னும் வீரன், தோன்றினன் - போர் செய்யப் புகுந்தான், (எ -
று.)
 


     (பாடம்) 1மைத்துனன். 2செங்கை வாளால். 3பொழுதகத்தே. 4தோன்றினான்.