பக்கம் : 842
 

     காலாள் மறவரோடே காலாள் மறவர் போராற்றினர், இவ்வகையே - இவ்வாறே,
தானை தம்முள் தாக்கால் உற - அப்படைகள் தமக்குள்ளே போரிட, தாமும் தம்முள்
தலைப்பெய்தார் - தலைவராகிய சுவணகேதுவும் சடிவேந்தனும் தமக்குள் போர் ஆற்றலை
மேற்கொண்டனர், (எ - று.)

மானம் போற்றலாவது - “புதையம்பிற் பட்டும் பாடூன்றல்’

அப்பொழுது இருதிறத்துப் படைகளும், யானையோடு யானையும், குதிரையோடு குதிரையும்,
மறவரோடு மறவரும், தேரோடு தேருமாக எதிர்ந்து போர் செய்யாநிற்பத், தலைவரிருவரும்
எதிர்ந்தனர், என்க.
 

( 208 )

சுவணகேது சடிமன்னனைப் புகழ்வான் போன்றிகழ்தல்

1339. அருவி யிலங்கு மதயானை
    யனல வூன்றி யணைபோழ்திற்
குரவ ரோடு படைபொருதல்
    கூடிற் றன்று குலவேந்தே
பொருவ ரென்னப் படுவாரங்
    கொருவர் போந்து 1பொரவொருவ
ரொருவி நிற்ற லுரங்கொல்லோ
    வென்றா னுவண மேந்தினான்.
 
     (இ - ள்.) அருவி இலங்கும் மதயானை - மதநீர் அருவியாகப் பெருகித் திகழும்
யானையை, அனல ஊன்றி - சினக்க எதிரே கடாவி, அணைபோழ்தில் - சடிமன்னன்
சுவணகேதுவினை அணுகியபொழுது, குரவரோடு படைபொருதல் - குரவர் ஆவாரொடு
படைக்கருவிகொண்டு போரிடுதல், கூடிற்றன்று - வீரர்களுக்குப் பொருந்துவதன்றாம்,
குலவேந்தே - உயர்குலத்து மன்னனே, பொருவர் என்னப்படுவார் - போர் மறவர்கள்
என்று சிறப்பித்துக் கூறப்படுவோர் இருவருள், அங்கு ஒருவர் போந்து பொர -
அப்போர்க்களத்தே ஒருவர் வந்து போர்செய்யா நிற்பவும், ஒருவர் ஒருவி நிற்றல் -
மற்றொருவர் இப்போர் தக்கதன்றென்று வாளா நிற்றலும், உரங்கொல்லோ -
ஆண்மையாகுமோ?, என்றான் - என்று சடிமன்னனைத் தடுத்தான், சுவணம் ஏந்தினான் -
சுவணக்கொடியோன், (எ - று.)

     நீயோ என்னோடு போரிடவருதி என்று சடி ஆண்டான் முதிர்ந்தமையைச்
சுட்டிக்காட்டி எமக்குக் குரவர் ஆவீர் உம்மொடு பொருதல் அறமன்று என்று சுவணகேது,
இகழ்கின்றான்.

     குலவேந்தே என்றது விஞ்சையனுக்குப் பெண்கொடாமல், கீழ்மகனாகிய மானிடற்குப்
பெண் கொடுத்தாய் என்று இகழ்ந்தபடி.
 

( 209 )


     (பாடம்) 1போர் பணித்தந். கொருவி நிற்ற லுறுங்கோலோ வென்றான் சுவணம்
ஏந்தினான்.