பக்கம் : 85
 

மண்டபத்தில் அமர்ந்திருந்த அரசன்; பொன்அணி வாயில் காக்கும் - பொன்னாலியன்ற
அழகிய திருவோலக்க மண்டபத்து வாசலைக் காவல்செய்யும்; பூ கழல் அவனைநோக்கி -
அழகிய மறக்கழலையுடைய வாயில் காப்போனைப் பார்த்து; கல்நவில் தோளினாய் -
கல்லைப்போல் திண்ணியதென்று சொல்லத்தக்க தோளையுடையவனே!; நாழிகை ஏழுகாறும்
- இதுமுதல் ஏழு நாழிகை வரையிலும்; என்னவரேனும் ஆக - எவராக இருந்தாலும்; வர -
அவர்கள் தடையின்றி உள்ளே வருதற்பொருட்டு; நீ காவல்விடு - நீ நின் காவற்றொழிலைக்
கைவிடுக; என்றான் - என்று பணித்தனன். (எ - று.)

     காட்சிக்கெளியனாய், வலியரால் நலிந்து முறை வேண்டினார்க்கும், வறுமையால்
வருந்திக் குறை வேண்டினார்க்கும் மற்றையோர்க்கும் எளிதில் அருள் செய்ய விரும்பிய
அரசன் வாயிற்காவலனுக்கு இவ்வாறு கட்டளை யிட்டான். இங்ஙனம் யாவர்க்கும்
காட்சிக்கெளியனாதற் பொருட்டு ஒவ்வொரு நாளும் ஏழு நாழிகை வரையறை
செய்யப்பட்டமை இதனால் உணரலாம். இன்னணம் - இன்னவண்ணம் என்பதன் மரூஉ.
ஏனும் - எனினும் என்பதன் மரூஉ. காறு - அளவு குறிப்பதோ ரிடைச்சொல்.

( 33 )

நிமித்திகன் வரவு

103. ஆயிடை யலகின் மெய்ந்நூ லளவுசென் றடங்கி நின்றான்
சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் 1குறுவன் கொல்லோ
நீயிடை 2யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற்சொன்னான்.
 
     (இ - ள்.) அ இடை - அச்சமயத்தில்; அலகு இல் மெய் நூல் அளவு சென்று
அடங்கி நின்றான் - எண்ணிறந்த உண்மை நூற் பொருள்களையும் அவை கூறுமளவும்
கற்றுணர்ந்து மேலும் அவற்றிற்கேற்ப அடக்கத்தை மேற்கொண்டு நிற்பவனும்; சேய்இடை
நிகழ்வது எல்லாம் - தொலைவிலும் அண்மையிலும் நிகழ்பவைகளை யெல்லாம்; சிந்தையில்
தெளிந்த நீரான் - உள்ளத்தில் தெளிவாக அறிந்த தன்மையுடையவனும் ஆகிய ஓர்
நிமித்திகன் - முக்காலங்களையும் உணரும் அறிவினையுடையான் ஒருவன்; மேய் - அங்கு
வந்து; இடைபெறுவன் ஆயின் - இப்பொழுது உன்னுடைய
 

     (பாடம்) 1. உறுவன் கோலோய். 2. அறிசெல்.