பக்கம் : 850 | | (இ - ள்.) துண்டவேகப் புள் உயர்த்தான் - வலிய அலகினையுடைய விரைந்துசெல்லும் இயல்பிற்றாய கலுழப்புள்ளைக் கொடியாக உயர்த்த சுவணகேதுவினுடைய, துளைக்கை யானை - துளையமைந்த துதிக்கையையுடைய யானை, சுடர் முடியான் - சடியரசனுடைய, புண்டரீகம் கொலையானை - திசை யானைகளில் ஒன்றாகிய புண்டரீகத்தை ஒத்த, கொலைத் தொழில்வல்ல யானைக்கு, உடைந்து போகும் பொழுதத்து - ஆற்றல் அழிந்து புறங்கொடுத்தோடும் அப்பொழுது, கொண்டவாளன் கேடகத்தன் - ஒரு கையில் வாளையும் ஒரு கையில் கிடுகையும் உடையவனாய், குதிகொள்வான்போல் எழுந்து - வென்று கடப்பவனைப் போன்று ஊக்கத்துடன் எழுந்து, எதிரே மண்டுவானை - தன் எதிரே மண்டி வருகின்ற சுவணகேதனனை, வயவேந்தன் கண்டு - வெற்றியுடைய சடிமன்னன் பார்த்து, வாளி மழை பொழிந்தான் - அவன்மேல் அம்புகளை மழைபோலப் பொழிந்தான், (எ - று.) புண்டரீகம் - சடியின் யானையின் பெயர் எனினுமாம். சடிமன்னனின் யானையோடு போர் செய்யலாற்றாது சுவணகேதுவின் யானை புறமிடும்போது, சடிமன்னன்மேல் வாளும் கிடுகும் கொண்டு மண்டிய சுவணகேதுவின்மேல் சடி கணை மழை பொழிந்தான், என்க. | ( 219 ) | சடிமன்னன் சுவணகேதுவைச் சாய்த்தல் | 1350. | மடுத்த வாளுங் கேடகமுங் கவசக் கண்ணு மார்பகமு மடுத்துக் குத்தி னாற்போலக் கழிந்த தம்பு கழிதலுமே யெடுத்து மறிக்கப் பட்டான்போ லிலங்கு பூணு மாரமுந்தேந் தொடுத்த தாம மாலையுமுன் சொரிய வீழ்ந்தான் சுடர்வேலோன். | (இ - ள்.) மடுத்த வாளும் - சுவணகேது கைப்பற்றிய வாட்படையும், கேடகமும் - கிடுகும், கவசக்கண்ணும் - கவசத்தின் மூட்டும், மார்பகமும் - மார்பும், அடுத்துக் குத்தினாற் போல - அண்மையினின்று குத்தப்பட்டன போன்று குத்தி, அம்பு கழிந்தது - அம்புகள் ஊடுருவிப் பாய்ந்தன, கழிதலுமே - அவ்வாறு அம்புகள் ஊடுருவிப் பாய்ந்தவுடனே, எடுத்து மறிக்கப்பட்டான் போல் - தூக்கித் தலைகீழாகப் பிடிக்கப்பட்டவனைப்போல, இலங்குபூணும் ஆரமும் தேம்தொடுத்த தாம மாலையும் முன் சொரிய - திகழ்கின்ற கடக முதலிய செறிக்கு மரபினவாய பூண்களும், மணிவடங்களும் தேன் பொருந்திய தொடுக்கப் பெற்ற தாமமாகிய மாலையும் முன்னரே வீழ்ந்தொழிய, சுடர்வேலான் - சுவணகேது, வீழ்ந்தான் - மாண்டு வீழ்ந்தான், (எ - று.) | | | |
|
|