பக்கம் : 853 | | தம் புகழ் முதலியவற்றை இவர்கள் புறமிட்டுக் கொன்றனராதலின், நஞ்சனார்களை என்றான் - தனக்கு நஞ்சுபோன்றவர்களை என்க. நகுதல் - சினத்தால் நிகழ்வது. வை வெஞ்சொல் - வைவதற்கேற்ற கொடுஞ்சொல். | ( 224 ) | இதுவுமது | 1355. | வாளர் வார்கழல் வீக்கிய தாளர் தாமுடைந் தோடினா னாளை நாணுடை நங்கைமார் தோளை நாணிலர் 1தோய்வதே. | (இ - ள்.) வாளர் - வாள்களையும் உடையராய், வீக்கிய வார்கழல் தாளர் - கட்டப்பட்ட நீண்ட வீரக்கழலையும் உடைய கால்களையுடையராய், தாம் உடைந்தோடினால் - இவர்கள் தாம் இவ்வாறு புறமிட்டு ஓடுவார்களாயின், நாளை - வருநாளில், நாணுடை நங்கைமார் - நாணமிக்க தம் பெண்டிருடைய, தோளை - தோள்களை, நாணிலர் - புறங் கொடுத்தமைக்குத் தாம் அவர் முன் சிறிதும் நாணுதல் இலராய், தோய்வதே - முயங்கவும் முயங்குவதோ ! (எ - று.) பகைதடிதற்குரிய வாளும் அதற்கு அறிகுறியாகிய வீரக்கழலும் உடையராயிருப்பவும் இவர் உடைந்தோடுதல் பெரிதும் நாணுடைத் தென்றான். வீரமிழந்த நீவிர் மகளிரை நாணமின்றித் தழுவவும் தழுவுவிரோ என்று அசதியாடினான், என்க. | ( 225 ) | இதுவுமது | 1356. | பொன்று மிவ்வுட லின்பொருட் டென்று நிற்கு மிரும்புக ழின்று 2நீர்கழிந் தீர்களாற் குன்றின் மேற்குடை வேந்திர்காள். | (இ - ள்.) குன்றின்மேல் குடை வேந்திர்காள் - அரண்வலிமிக்க மலையுச்சியிலே மேலும் குடைகவித்து வாழும் வேந்தர்களே!, பொன்றும் இவ்வுடலின் பொருட்டு - இறந்தேதீரும் எளிய இவ்வுடலைச் சில் பகல் ஓம்பும் பொருட்டு, என்றும் நிற்கும் இரும்புகழ் - அழியாது எப்போதும் நிலைத்தற்குரிய பெரிய புகழை, இன்று நீர் கழிந்தீர்கள் ஆல் - இன்று நீயிர் இழந்துவிட்டீரே, ஆல் : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1தோயவே. 2நீரிகந். | | |
|
|