பக்கம் : 863
 

     (இ - ள்.) வானின் வாவு விஞ்சையன் - விசும்பிலே தாவிச்சென்ற, சிறீசேனனுடைய,
மான மா மணிமுடி - பெருமை மிக்க சிறந்த மணிகள் அழுத்திய முடியணிந்த தலை, ஏனை
மன்னன் ஏதியான் - மற்றவனாகிய சிறீபாலன் வாளால் ஏறுண்டு, மீனின் வந்து வீழ்ந்ததே -
விண்மீன் வீழ்ந்தாற் போன்று மண்ணின் வந்து வீழ்ந்தது, (எ - று.)

     முன்னரே விண்ணிற் சென்ற சிறீசேனன் தலை, சிறீபாலனாற் றுணிக்கப்பட்டு,
விண்மீன் வீழ்ந்தாற் போன்று மண்ணின்மேல் வந்து வீழ்ந்த தென்க.

(247)
 
விச்சாதரர் படை உடைந்தோடுதல்
1378. திருநிலை யகமுடைச் செல்வன் செங்கதிர்
விரிநிலை மணிமுடி மிளிர்ந்து வீழ்தலும்
பொருநிலை 1யழிந்துபிற் புறக்கொ டுத்தது
பருநிலை மலையவர் பரவைத் தானையே.
 
     (இ - ள்.) திருநிலை அகம் உடைச் செல்வன் - திருநிலையகம் என்னும் நகரத்திற்கு
அரசனாகிய சிறீசேனனுடைய, செங்கதிர் விரிநிலை மணிமுடி - செஞ்ஞாயிற்று மண்டிலம்
விரிந்தாற்போன்ற நிலைமையினையுடைய மணிகளழுத்திய முடியையுடைய தலை, மிளிர்ந்து
வீழலும் - ஒளியுடனே தரையில் வீழ்ந்தவுடன், பருநிலை மலையவர் பரவைத் தானை -
பருத்து நிற்றலையுடைய மலைகளிலே வாழ்கின்ற அச்சுவகண்டனின் கடல்போன்ற படை,
பொருநிலை அழிந்து - போர் செய்தற்குரிய ஆற்றல் அழிந்து, பின்புறங் கொடுத்தது -
முதுகு காட்டி ஓடிற்று, (எ - று.)

     பிற்புறம் - முதுகு.

     திரு நிலையகம் என்னும் நகரத்திற்கு அரசனாகிய சிறீசேனன் என்க. பருநிலை
மலையவர் என்றது உத்தரசேடியில் வாழ்வோராகிய விஞ்சையரை.

(248)

 
கனக சித்திரன் அப்படையைத் தடுத்தல்
1379. வேயுடை வெள்ளிசேர் விலங்கல் வேந்தர்கள்
ஆயிடை யுடைதலு மாழி யான்மகன்
காய்வுடை மனத்தவன் கனக சித்திரன்
சேயிடை புகுந்தன னின்று செப்பினான்.
 
     (இ - ள்.) வேய் உடை வெள்ளிசேர் விலங்கல் வேந்தர்கள் - மூங்கில்களையுடைய
வெள்ளியாலாய மலையினை உடைய அரசர்கள், ஆயிடை உடைதலும் - அப்பொழுது
புறமிட்டவுடன், ஆழியான் மகன் -

     (பாடம்) 1 யழிந்தபிற்.