பக்கம் : 864
 

     அச்சுவகண்டனுடைய மகனாகிய, காய்வு உடை மனத்தவன் - சினமிக்க
மனத்தையுடைய, கனகசித்திரன் - கனகசித்திரன் என்பான், சேயிடை புக்கறன் -
தொலையிடத்தே புகுந்து, நின்று - அவர்களைத் தடுத்து நின்று, செப்பினான் -
கூறுவானாயினன், (எ - று.)

     வேயுடைவெள்ளி - வேய்ந்தாற் போன்ற வெள்ளி எனினுமாம். ஆழியான் - சக்கரப்
படையுடைய அச்சுவகண்டன். அச்சுவகண்டன் மகனாகிய கனகசித்திரன் உடைந்தோடும்
தன் படையிடை நின்று கூறினான் என்க.

(249)

 

கனக சித்திரன் உடைந்த தம் வீரரைக் கடிந்துரைத்தல்

1380. உருவிய வாளின னுடுத்த கச்சினன்
வெருவர விழித்தனன் 1வீரம் வேட்டுமா
டொருவனை யொருவனங் கஞ்சி யோடுமேல்
அருவருப் புடையதவ் வாண்மை 2யாகுமே.
 
     (இ - ள்.) உருவிய வாளினன் - வாட்படையை உறை கழித்தவனாய், உடுத்த
கச்சினன் - கச்சணிந்தவனாய், வெருவர விழித்தனன் - பகைவர் அஞ்சும்படி
விழித்தவனாய், வீரம் வேட்டு - ஆண்மையை விரும்பி, மாடு ஒருவனை - தன் பக்கலிலே
வந்தெதிர்ந்த பகைவன் ஒருவனை அஞ்சி, ஒருவன் - ஒரு மறவன், ஓடுமேல் -
புறங்கொடுத் தோடுவானாயின், அவ்வாண்மை - அவனுடைய அத்தகைய வீரம்,
அருவருப்புடையது ஆகும் - மற்றையோரால் பழிக்கத்தக்கது ஆகும், (எ - று.)

     வாளினனும், கச்சினனும், வெருவர விழித்தவனும், வீரம் வேட்ட வனுமாகிய ஒரு
மறவன், பகைவனை அஞ்சி ஓடுவானாயின், அவ்வீரனுடைய ஆண்மை கேட்டற்கே
அருவருப்புடையதென்றான், என்க.

(250)

 

இதுவுமது

1381 மதிதொடு நெடுவரை 3மான விஞ்சையர்
விதிபடு 4மனிசரை வெருவி மீண்டனர்
அதிசய மிதுவென வலர நக்கனன்
கதிர்விடு வளையெயி றுடைய காளையே.
 
     (இ - ள்.) மதிதொடு நெடுவரை - திங்களைத் தொடுமாறுயர்ந்த நீளிய மலைகளிலே
வாழும், மான விஞ்சையர் - மானம் மிக்க விச்சாதரர்கள், விதிபடு மனிசரை வெருவி - நம்
விதியிலே அகப்பட்டு வாழும் எளிய மானிடரை அஞ்சி, மீண்டனர் - மீள்வாராயினர்!, இது
அதிசயம் - இச்செயல்
 

     (பாடம்) 1வீரவேகமோ. 2யாகுமோ. 3மாள. 4மனிதரை.