பக்கம் : 867 | | கனக சித்திரனின் போர்த்திறம் | 1385. | இன்னண மொழிந்தெதிர் தெழித்து மாற்றலர் மன்னிய கடற்படை மண்டி வாளினால் கன்னவி றோளினான் கண்டங் கண்டமாத் துன்னிய துணிபல தொடரத் தோன்றினான். | இ - ள்.) இன்னண மொழிந்து - இன்னோரன்ன மொழிகள் பல பேசி, எதிர்தெழித்து - அவர்களை எதிர்நின்று அதட்டி, மாற்றலர் மன்னிய கடற்படை மண்டி - பகைவர்கள் நிலைபெற்ற கடல்போன்ற பெரிய படையிடத்தே புகுந்து, வாளினால் - தனது வாட்படையாலே, கன்னவில் தோளினாள் - மலையை ஒத்த தோளையுடைய கனகசித்திரன், கண்டங் கண்டமாய் - துண்டு துண்டுகளாய், துன்னிய துணிபல தொடர - நெருங்கிய உடற்றுணிகள் பற்பல தான் செல்லும் வழியிலே தொடர்ந்து தோன்றுமாறு, தோன்றினான் - விளங்குவானாயினன், (எ - று.) இவ்வாறு இகழ்ந்த கனகசித்திரன் போர்க்களத்தே புக்குப் பகைவர்கள் உடல் துண்டதுண்டமாய்ப் புரள வெட்டி வீழ்த்தி நூழிலாட்டினான் என்க. | (255) | | இதுவுமது | 1386. | விலங்குவேல் 1கொண்டையை யுந்தி வேற்றவர் 2மலங்கமேற் செல்வது மான மாமெனப் பொலங்கலங் கழலொடு புலம்பப் பூமிமேல் 3அலங்கலா னடந்தம ரழுவந் தாங்கினான். | (இ - ள்.) விலங்குவேல் கொண்டு ஐயை உந்தி - திகழ்கின்ற வேற்படைகொண்டு படைத்தலைவனைக் குத்திவீழ்த்தி, வேற்றவர் - எஞ்சிய படைஞர், மலங்க - கலங்கும்படி, மேற்செல்வது - போர்மேற் செல்லுதல், மானம் ஆம் என - பெருமை ஆகும் என்று கருதி, பொலங்கலங் கழலொடு புலம்ப - பொன் அணிகலன்கள் வீரக்கழலுடனே ஒலிக்குமாறு,பூமிமேல் - நிலத்தின் மேலே, அலங்கலான் - மாலையணிந்த கனகசித்திரன், நடந்து - தன் கால்களாலே நடந்து, அமர் அழுவந் தாங்கினான் - அமர்க்களத்தே பகைவர்களை எதிர்த்துத் தடுத்தான், (எ - று.) இப் படைக்குத் தலைவனை முன்னர்க் கொன்று பின்னர்ப் படைகளை அழிப்பதே மாண்பெனக் கருதிப் போர்க்களத்தே காலால் நடந்தே சென்றான் என்க. | (256) |
| (பாடம்)1 கொண்டவை. 2 மலங்குமேற். 3 அலங்கலர் நடந்த | | |
|
|