பக்கம் : 868
 
இதுவுமது
1387. பத்திரக் கடிப்பினன் பைம்பொற் றாரினன்
சித்திர மணித்தொடர் திளைக்குந் தானையன்
கத்திகைக் கண்ணியன் காணும் பாலெலாம்
தொத்திணர்க் குஞ்சியான் காளை தோன்றினான்.
 
     (இ - ள்.) பத்திரக்கடிப்பினன் - அழகிய குதம்பையை அணிந்தவனாய், பைம்பொன்
தாரினன் - பசிய பொன்மாலை பூண்டவனாய், சித்திரமணித் தொடர் திளைக்கும்
தானையன் - சித்திரத்தொழில் அமைந்த மணிமாலைகள் பொருந்திய
ஆடையணிந்தவனாய், கத்திகைக் கண்ணியன் - கத்திகையாகிய முடிமாலையை
அணிந்தவனாய், தொத்திணர் குஞ்சியான் - கொத்தாகிய பூக்களைச்செருகிய தலைமயிர்க்
கற்றையையுடைய, காளை - கனகசித்திரன், காணும் பாலெலாம் - பார்க்குமிடந்தோறும்,
தோன்றினான் - காணப்பட்டான், (எ - று.)

     பத்திரம் - அழகு; மேன்மையுமாம். கடிப்பு - ஒருவகைக் காதணி. “மங்கலக் கடிப்புச்
சேர்த்தி“ (சிந்தாமணி, கோவிந் - 80) என்னும் சிந்தாமணியானும் உணர்க.

     கடிப்பினனாய்த் தாரினனாய்த் தானையனாய்க் கண்ணியனாய்க் குஞ்சியான் காணும்
பாலெலாம் தோன்றினான் எனக் கூட்டுக. தானை - ஆடை.

(257)

 
இதுவுமது
1388

வம்பமா விருதுணி பட்ட மாவொடு
செம்பொனா லியன்றதேர் சிந்தி வீழ்ந்தன
கம்பமா 1வொழிந்தன களிறு காளைவாள்
வெம்புலால் விரையினும் வெறுத்த தில்லையே.
 

     (இ - ள்.) வம்பமா - புதிய குதிரைகள், இருதுணிபட்ட - இவ்விரண்டு
துண்டுகளாக்கப்பட்டன, மாவொடு செம்பொனால் இயன்ற தேர் - குதிரைகளோடே
செவ்விய பொன்னாலியன்ற தேர்கள், சிந்திவீழ்ந்தன - சிதறி வீழ்ந்தொழிந்தன, கம்பமா
களிறு ஒழிந்தன - தூண்களில் யாக்கும் பெருமையுடைய யானைகள் இறந்தொழிந்தன,
காளைவாள் -

     கனகசித்திரனுடைய வாட்படை, வெம்புலால் விரை - வெவ்விய ஊனின் மணத்தை,
இனும் - இத்துணை நுகர்ந்த பின்னரும், வெறுத்ததில்லை - வெறுத்தொழியாதாயிற்று,
(எ - று.)

     கம்பமா - நடுக்கமாக எனினுமாம்.

(258)


     (பாடம்) 1 பொழிந்தன.