நிமித்திகன் தன் ஆற்றலைக் காட்டத் தொடங்குதல் |
105. | உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக் கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான் முற்றிய வுலகின் மூன்று காலமு முழுது நோக்கிக் கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான். |
(இ - ள்.) குணம் குன்று ஒப்பான் - நல்லியல்புகளில் மலையை ஒப்பவனாகிய அந்நிமித்திகன்; உற்ற - பொருந்திய; தன் ஒழுக்கிற்கு ஏற்ப - தன்னுடைய நல்லொழுக்கத்திற்குத் தக்கபடி; உலகு உபசாரம் நீக்கி - உலக நடைக்கேற்பச் செய்யும் வழிபாடுகளை விலக்கி; கொற்றவன் குறிப்பு நோக்கி - அரசனது குறிப்பைப் பார்த்து; இருந்தபின் - அரசன்காட்டிய இருக்கையில் அமர்ந்தபின்; முற்றிய உலகில் - நிரம்பிய உலகத்தில்; மூன்று காலமும் முழுதும் நோக்கி - இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் மூன்று காலத்துச் செய்திகளையும் நன்றாகப் பார்த்து; கற்றநூல் புலமை தன்னை - தான் கற்றுள்ள சோதிட நூலுணர்ச்சித் திறத்தை; காட்டுதல் கருதிச் சொன்னான் - எல்லோருக்கும் நன்கு புலப்படுத்த நினைத்துச் சில மொழிகளைக் கூறலானான். (எ - று.) ஒழுக்கத்தாலுயர்ந்தோர் தமக்குப் பிறர் செய்யும் உபசாரங்களை மறுப்பது இயல்பென்க. குணக்குன்று - நற்குண மலை. மலைக்கு நற் குணங்களாவன; “அளக்கலாகா வளவும் பொருளும், துளக்க லாகா நிலையுந் தோற்றமும், வறப்பினும்வளந்தரும் வண்மையும் மலைக்கே“ என்பவைகளாம். மூன்றுகாலம் : இறப்பு எதிர்வு நிகழ்வு என்பன. |
( 36 ) |
அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல் |
106. | கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல் நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை விசும்பகத் திழிந்து வந்தோர் 1வேழம்வெண் போது சேர்ந்த தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே. |
|
(பாடம்) 1. வேந்தன்வெண் போது சேர்ந்த. |