பக்கம் : 870
 

     இவ்வாறு கனகசித்திரன் நூழிலாட்டுதலைத் தூதர்களாற் கேள்வியுற்ற அச்சுவகண்டன்
தம்பிமார்களுடைய கடல் போன்ற பெரும்படையும் சினந்து கனகசித்திரனுடன் வந்து கூடிற்
றென்க.

(260)

இது முதல் 16 செய்யுள்கள் ஒரு தொடர்

1391. வெருவிமுன் னுடைந்துபோய்ப் பெயர்ந்து வேற்றவர்
ஒருவில்வா ளழுவம்வந் துந்து 1மப்படை
உரவுநீ ரிருங்கட லோதம் போந்தபின்
அரவநீர் வேலைமீ தலைப்ப தொத்ததே.
 
     (இ - ள்.) முன் வெருவி உடைந்துபோய் - முன்னர் அஞ்சிப் புறமிட்டு ஓடிப்போய்,
பெயர்ந்து - மீண்டும், வேற்றவர் ஒருவு இல் - பகைவர்கள் நீங்காது நின்ற, வாள் அழுவம்
வந்து - வாட்போர் உடற்றும் போர்க்களத்தே புகுந்து, உந்தும் அப்படை - போர் செய்யா
நின்ற அவ்விஞ்சையர் படை, உரவு நீர் இருங்கடல் ஓதம் - மிக்க நீரையுடைய பெரிய
கடலின் அலையொன்று, அரவநீர் வேலைமீது போந்தபின் - ஒலியுடைய நீரையுடைய
கரைமீதுபோன பின், அலைப்பது ஒத்தது - மீண்டும் வந்து தாக்குதல் போன்றிருந்தது,
(எ - று.)

     முன் உடைந்தோடிப் பின்வந்து போர் செய்யும் விஞ்சையர் படை கரையை
எய்தியுடைந்த அலை மீண்டு வந்து தாக்குதல் போன்றிருந்தது என்பது கருத்து.

     ஓதம் - அலை. வேலை - கடற்கரை.

(261)

1392.

மன்னவற் கிளையவர் வயிர மால்வரை
அன்னவ ரயிற்படை யரச வீரர்கள்
துன்னலர்க் கரும்படர் தோன்றத் தோன்றுபு
2முன்னினர் கனன்றுபோர் முறுக முட்டினார்.
 

     (இ - ள்.) மன்னவற்கு இளையவர் - அச்சுவகண்டன் தம்பியராகிய நீலகண்டன்
முதலிய நால்வரும், வயிரமால்வரை அன்னவர் - பெரிய வயிரமலையை ஒத்தவர்கள்,
அயிற்படை அரச வீரர்கள் - வேற்படையையுடைய வீரர்களும் அரசராகிய வீரர்களுமாகிய,
துன்னலர்க்கு - பகைவர்களுக்கு, அரும்படர் தோன்ற - கடத்தற்கரிய துயர் தோன்றும்படி,
தோன்றுபு - போர்க்களத்தே தோன்றி, முன்னினர் - முற்பட்டனர், கனன்று - பெரிதும்
வெகுண்டவராய், போர்முறுக முட்டினார் - போர்த்தொழிலிலே மிக மோதினார்கள்,
(எ - று.)


     (பாடம்) 1 மற்படை.2முன்னினார் கனன்றுபோர் முறுகி மூட்டினார்.