பக்கம் : 871 | | அச்சுவகண்டனுடைய தம்பிமார்களும் பகைவர் அஞ்சும்படி கனன்று போர்க்களம் புகுந்து போராற்றினர் என்க. | (262) | 1393. | கண்ணிடை சிவந்துகை சுட்டிக் காய்ந்துதம் பண்ணுடை மழகளி றுந்தி னார்படை எண்ணிடை யிடுமிட மின்றி யெங்கணும் மண்ணிடை யவரொடு 1மயங்கி நின்றதே. | (இ - ள்.) கண் இடை சிவந்து - கண்கள் சிவந்து, காய்ந்து - சினந்து, தம் பண்ணுடை மழகளிறு - தாம் ஏறிய ஒப்பனை செய்யப்பட்ட இளங்களிறுகளை, கை சுட்டி - கையாலே குறித்து, உந்தினார் - செலுத்தினார், எண் இடை இடும் இடம் இன்றி - எள்ளைத்தானும் இடையே இடுதற்குரிய சிறிய இடந்தானும் இல்லாதபடி, படை - விஞ்சையர் படை, எங்கணும் - எவ்விடத்தும், மண்ணிடை யவரொடு - மனிதர் படையோடே, மயங்கி - கலந்து, நின்றதே - நிற்பதாயிற்று, (எ - று.) அச்சுவகண்டன் தம்பிமார்கள் கண்கள் சிவந்து களிறுகளைக் கையாற் சுட்டி ஏவியவராய்ப் போர்க்களத்தே புகுந்தனர் ; அப்பொழுது அப்போர்க்களம் படைகளால் நிரம்பி எள்ளிட இடமிலதாயிற்று என்க. எண் - எள். | (263) | 1394. | இலைதடு மாறின பகழி யெங்கணும் சிலைதடு மாறின சிலைத்த தேர்க்குழாம் மலைதடு மாறின போல மான்றரோ தலைதடு மாறின தடக்கை வேழமே. | (இ - ள்.) இலை தடுமாறின பகழி - அம்புகள் தம் இலைகளோடு பகையம்பின் இலைகள் தாக்கித்தள்ளாடின, எங்கணும் - போர்க்களமெங்கும், சிலைதடுமாறின - வில்லொடு வில் பொருது தள்ளாடின, தேர்க்குழாம் சிலைத்த - தேர்க்கூட்டங்கள் ஒன்றோடொன்று மோதி முழங்கின, தடக்கை வேழம் - வலிய துதிக்கையையுடைய யானைகள், மான்று - போர் செய்து மயங்கி, மலைதடுமாறினபோல - மலைகள் தள்ளாடுவது போன்று, தலை தடுமாறின - தலை தள்ளாட்டம் கொண்டன, (எ - று.) அவ்வழி, அம்புகள் தடுமாறின, விற்கள் தள்ளாடின, தேர்கள் ஆரவாரித்தன, யானைகள் மயங்கித் தடுமாறின என்க. | (264) |
| (பாடம்) 1 மயங்குவிப்பதே. | | |
|
|