பக்கம் : 874 | | | தழைசெவி மதமுகத் தொளிக்குஞ் சக்கர மழைசொரி முகில்புகு மதிய மொத்தவே. | (இ - ள்.) குழைசுடர்ந்து இலங்குதார் அரசர் - குண்டலங்கள் ஒளிபரப்பத் திகழ்கின்ற மாலையணிந்த மன்னர்கள், கோலம்மான் இழைசுடர் தோள்களால் - ஒப்பனையாலே மாட்சிமைப்பட்ட மணியணிகள் ஒளிரும் தம் தோள்களால், எறிய - எறிதலாலே, யானையின் - யானைகளின், தழை செவி மதம் முகத்து - விரிந்த செவிகளையும் மதநீர் பொழிதலையும் உடைய முகங்களிலே, ஒளிக்கும் சக்கரம் - புகுந்து மறையும் ஆழிப்படைகள், மழைசொரி முகில்புகு மதியம் ஒத்த - மழைபொழியா நின்ற மேகத்தூடே புகுந்து மறையும் திங்கள்மண்டிலத்தை ஒத்துத்தோன்றின, (எ - று.) தழைசெவி : வினைத்தொகை. தழைத்தல் - ஈண்டு விரிதன்மேனின்றது. இலங்கு தாரரசர் எறிந்த ஆழிப்படை களிறுகளின் முகத்திற் புக்கொளிப்பன முகிலிடைப் புக்குமறையும் திங்களை ஒத்தன என்க. | (269) | | 1400. | செருவரை யனையதோண் மன்னர் சேனையுள் அருவரை புகுமயி லனைய வாயின கருவரை யனையன 1களிநல் யானையின் பெருவரை முகம்2புகும் பிண்டி பாலமே. | (இ - ள்.) செருவரை அனையதோள் மன்னர் - போர்த் தொழிலையுடைய மலைபோன்ற தோள் பொருந்திய அரசருடைய, சேனையுள் - படைகளினூடே, கருவரை அனையன களிநல் யானையின் -கரிய மலை போன்ற களிப்புடைய நல்ல யானைகளின், பெருவரை முகம்புகும் - பெரிய கோடுகளையுடைய முகத்திலே முழுகுகின்ற, பிண்டிபாலம் - பிண்டிபாலம் என்னும் கருவிகள், அருவரைபுகும் மயில் அனைய வாயின - ஏறற்கரிய மலையிடத்தே புகும் மயில்களை ஒத்துத்தோன்றின, (எ - று.) யானைகளின் முகங்களிற் பாய்கின்ற பிண்டிபாலம் கரிய மலையிடத்தே புகும் மயில்களை ஒத்தன என்க. பிண்டிபாலம் - தலையிலே மயிற்பீலி கட்டப்பட்டு எறிவதொரு படை ஆகலின் மயிலை உவமை கூறினார். இதனை, “பிண்டிபாலத்தை ஏந்தி அருவரை நெற்றிப் பாய்ந்த ஆய்மயிற் றோகைபோலச் சொரிமதக் களிற்றின் கும்பத்தழுத்தலின்“ எனவரும் சீவகசிந்தாமணியினும் (2269) காண்க. | (270) |
| (பாடம்) 1களிஞல். 2 புகுபிண்டி. | | |
|
|