பக்கம் : 875
 
 
1401. மண்ணியன் மன்னர்கை முறுக்கி 1விட்டிடக்
கண்ணியன் யானைமேற் கணையம் பாய்வன
திண்ணிய நெடுவரைச் சென்னி மீமிசை
விண்ணியல் 2விளங்குமின் விழுவ போன்றவே.
 
     (இ - ள்.) மண் இயல் மன்னர் கைமுறுக்கி விட்டிட - மண்ணை ஆளும்
இயல்புடைய அரசர் தம் கைகளால் திரித்து வீசிய, கணையம் - கணையம் என்னும் படை,
கண் இயல் யானை மேல் பாய்வன - கண்கட்கு இனிய இயல்புடைய யானைகளின் மேலே
பாய்கின்றவை, திண்ணிய நெடுவரைச் சென்னி மீமிசை - திண்மையுடைய நீண்ட
மலைகளின் உச்சியிலே, விண்ணியல் விளங்கும் மின் - விண்ணிலே தோன்றுகின்ற
விளக்கமுடைய மின்னல்கள், விழுவபோன்றவே - விழுவதை ஒத்தன,
(எ - று.)

     கணையம் - ஒருவகைத் தடி. “யானை யுடையபடை காண்டல் இனிதே“
என்பவாகலின் கண் இயல் யானை என்றார். கண் இயல் - கட்பொறிக்கு இனிய
இயல்புடைய என்க. மன்னர் கைமுறுக்கிவிட்ட கணையம் யானைமேற் பாய்வன
மலையுச்சியில் மின்னல் வீழ்வதைப் போன்றன என்க.

(271)

 
1402. கடுத்துவீழ் கடாக்களிற் றுழவர் தந்தலை
அடுத்3தகீ சகந்தமோ டற்று வீழ்வன
தொடுத்ததேன் றொடர்ந்த4வீப் பிறங்க லோடுடன்
உடுத்தமால் வரைமருங் 5குருள்வ வொத்தவே.
 
     (இ - ள்.) கடுத்துவீழ் கடாக்களிற்று உழவர்தம் - விரைந்து சொரிகின்ற
மதநீரையுடைய யானைமறவருடைய, தலை - தலைகள், அடுத்த கீசகந்தமோடு
அற்றுவீழ்வன - தம்மேற் சூட்டிய தலைச்சீராவோடு அறுபட்டு வீழ்கின்றவை, தொடுத்த
தேன் - மலைமேல் தொடுக்கப்பட்ட தேனிறால், தொடர்ந்த வீப்பிறங்கலோடு உடன் -
தம்மைத் தொடர்ந்து வருகின்ற ஈத்திரளோடே ஒன்றுபட்டு, உடுத்த மால்வரை மருங்கு -
பொழில்களை உடுத்துள்ள பெரிய மலையின் பக்கத்தே, உருள்வ ஒத்தவே உருளுமவற்றை
ஒத்திருந்தன, (எ - று.)

     யானை மறவர்களின் தலைகள் கீசகத்தோடு உருள்வன வண்டுக் குழாத்துடன்
உருளும் தேனடையைப் போன்று தோன்றின என்க.

     யானைக்கு மலையும், மறவர்தலைக்குத் தேனடையும், கீசகத்திற்குத் தேனீத்திரளும்
உவமைகள். கீசகம் - ஒருவகைத் தலைப்பாகை; தலைச்சீரா என்பதுமிது.

(272)

 


     (பாடம்) 1யிட்டிடக். 2விளங்குமீன். 3திக்கந்தமோ. 4விப்பிறங்க.
5குருவ மொத்தவே.