(இ - ள்.) கய தலைக் களிற்றினாய் - மெல்லிய தலையையுடைய யானையை உடையவனே! கங்குல் - இரவிலே; ஓர்கனாக் கண்டது உளது - நீ ஒரு கனாவினைக் கண்டுள்ளாய்; நயந்து அது தெரியின் - விருப்பத்துடன் அக்கனாவினை ஆராய்ந்து பார்த்தால்; ஓர்வேழம் - ஒரு யானை; விசும்பு அகத்து இழிந்து வந்து - விண்ணிடத்தினின்றும் இறங்கிவந்து; நம்பி நளிகடல் வண்ணன் தன்னை - ஆண்மக்களிற் சிறந்தவனும் பெரிய கடல்போன்ற கருநிறத்தை யுடையவனுமான திவிட்டனுக்கு; வெண்போது சேர்ந்த தயங்கு ஒளிமாலை - வெள்ளிய பூக்களால் அமைந்த விளங்குகின்ற ஒளியினை யுடைய மாலையை; சூட்டி - அணிந்து; தன் இடம் அடைந்தது - தனது இடத்திற்குச் சென்றது. (எ - று.) அன்றே - அசை. கய, நளி என்பன பெருமையை உணர்த்தும் உரிச்சொற்கள். “தடவுங் கயவும் நளியும் பெருமை“ என்பது தொல்காப்பியம். இச் செய்யுளால் அரசன் கண்ட கனா இன்னதென்று குறிகாரன் எடுத்துக் கூறினான். |
( 37 ) |
கனாவின் பயனை நிமித்திகன் கூறுதல் |
107. | மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் 1கேண்மோ நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன்வந்து தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான். |
(இ - ள்.) மல் மலர்ந்து அகன்றமார்ப - மற்போர்செய்தலால் விரிந்த மார்பை யுடையவனே; அதன்பயனும் கேண்மோ - அக்கனாவின் பயனையுங் கேட்பாயாக; மின்மலர்ந்து இலங்கு பைம்பூண் - மின்னலைப் போல ஒளி பரந்து விளங்குகிற பசிய அணிகலன்களை யணிந்த; விஞ்சை வேந்து ஒருவன் வந்து - வித்தியாதர அரசன் ஒருவன் இவ்வுலகத்திற்குவந்து; நல்மலர் நகைகொள்கண்ணி - நல்ல மலரால் விளங்குதலையுடைய மாலையை அணிந்த; நம்பி தன் நாமம் ஏத்தி - திவிட்டனது பெயரைப்புகழ்ந்து போற்றி; தன்மகள் ஒருத்தி தன்னை - தன்மகள் ஒருத்தியை; தந்தனன்போகும் என்றான் - மணஞ்செய்து கொடுத்துவிட்டுப் போவான் என்று கூறினான். (எ - று.) மற்று, தான் அசைநிலைகள். |
|
(பாடம்) 1. கேட்டி, கேட்பின். |