பக்கம் : 880
 

     (இ - ள்.) இரத்தின கண்டனும் - மணிகண்டனும், ஏனை வீரரும் - மற்றைய
மறவர்களும், வருபடை - தம்மோடுவரும் படையை, வரைத்தனர் - கூறுபடுத்துக்
கொண்டவராய், வீதிவாய் எலாம் - தாம் செல்லும் வழியெல்லாம், எரித்தனர் - தீயால்
எரித்தனராய், நால்வரும் - அச்சுவகண்டனுடைய நான்கு தம்பிமார்களும், இளைய
காளையை - விசயனை, முரித்திடு முனிவினர் ஆகி - கொன்றுவிடுதற்குரியதொரு
பெருஞ்சினம் உடையராய், முற்றினார் - வளைத்துக்கொண்டனர், (எ - று.)

     ஈண்டும் இளமை பருவங்குறித்து நின்றது.
     முரித்தல் - அழித்தல்; கொல்லுதல்.

     இரத்தினகண்டன் முதலிய அச்சுவகண்டன் தம்பியர், விசயனைக் கொன்றொழிக்கும்
கருத்துடன் சினமிக்கு வளைத்துக்கொண்டனர் என்க.

(281)

 

அப்பொழுது விசயன் தோற்றான் என்று ஒரு
பொய்ப்பூசல் பரவுதல்

1412. அடங்கின னரசிளங் குமர னோவென
உடங்கலந் தொல்லொலி யெழுந்த தாயிடை
மடங்கலில் கருங்கடன் மலங்கிற் றொத்தது
தடங்கமழ் சுரமைநாட் டரசன் றானையே.
 
     இ - ள்) அரசிளங்குமரன் - பயாபதியின் மைந்தனாகிய இளமையுடைய விசயன்,
அடங்கினன் என - பகைவர்க்குத் தோற்றொழிந்தான் என்று (அப்பொழுதொரு
பொய்ச்செய்தி பரவிற்றாக,) ஆயிடை - அப்பொழுது, உடங்கலந்து - ஒன்றுபட்டு ஒல்ஒலி -
ஒல் என்னும் ஒரு பேரொலி, ஓஎன எழுந்தது - ஓஓ என்று எழலாயிற்று, மடங்கல் இல்
கருங்கடல் - குறைதலில்லாத பெரிய கடல், மலங்கிற்று ஒத்தது - கலங்கியதைப்போன்று
கலங்கலாயிற்று, தடங்கமழ் சுரமைநாட்டு அரசன் தானை - குளங்கள் மலர் மணங்
கமழாநின்ற சுரமைநாட்டு மன்னனுடைய படை, (எ - று.)

     இரத்தினகண்டன் முதலியோரால் வளைத்துக் கொள்ளப்பட்டவுடன் விசயன்
தோற்றொழிந்தான் என்று ஒரு பொய்ச்செய்தி போர்க்களமெங்கும் பரவிற்று; அதனால்
திவிட்டன் சேனை கடல் கலங்கினாற் போன்று கலங்கிற் றென்க.
 

 (282)

 

விசயனை, ஓர் அரிமாவும் நாஞ்சிலும் வந்தடைதல்
1413. எரிபுரை யுளைகளோ டிலங்கு வெண்பிறை
விரிவன வெனவிளங் கெயிற்றொ டாயிடை