பக்கம் : 89
 

     விஞ்சை வேந்தொருவன் என்றது இரத நூபுர நகரத்தரசனாகிய சுவலனசடி யரசனை,
தன்மகள் ஒருத்தி என்றது அவன் மகளாகிய சுயம்பிரபையை. கேண்மோ : மோ.
முன்னிலையசை. நகை - விளங்குதல்; தொழிற்பெயர். நகு - பகுதி. ஐ - விகுதி.
 

( 38 )

தூதன் ஒருவன் வருவான் என்றல்

108. 1கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்
திட்பமாஞ் சிலையி னாய்! நீ 2தெளிகநா ளேழு சென்றால்
ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான்.
 
     (இ - ள்.) பகர் - சொல்லப் பெறுகிற, கள்திவலை சிந்தும் - தேன்துளியைச்
சிந்துகின்ற; கடிகமழ்குவளைக் கண்ணி - மணம்வீசும் குவளை மலர்மாலையையும்; திட்பம்
ஆம் சிலையினாய் - வலிமை மிக்கதாய வில்லையும் உடைய அரசனே!; நாள் ஏழு
சென்றால் - நாட்கள் ஏழுகடந்தால்; ஒட்பம்ஆய் உரைக்கவல்லான் ஒருவன் -
விளக்கமாகக் பேசக் கூடிய தூதன் ஒருவன்; ஓர் ஓலைகொண்டு - திருமுகம் ஒன்றைக்
கையில் கொண்டு; புட்பமா கரண்டம் என்னும் - புட்பமாகரண்டம் என்று சொல்லப்
பெறுகிற; பொழில்அகத்து இழியும் - பொழிலினிடத்திலே வந்து இறங்குவான்; நீ தெளிக
என்றான் - நான் கூறியதன் உண்மையை நீ அத்தூதன் வரவைக்கொண்டு தெளிவாயாக
என்று உரைத்தான். (எ - று.)

     ஒருவனென்றது சுவலனசடி யரசனிடத்திலிருந்து தூது வருகின்ற மருசி என்பவனை.
திட்பம் ஒட்பம் பண்புப் பெயர்கள். புட்பமா கரண்டம் - போதன நகரத்தையொட்டியுள்ள
ஒருபூம்பொழில். புட்பமாகரண்டம் - மலர்ப் பெருங்குடலை என்னும் பொருட்டு. அஃதப்
பூம்பொழிற்கு உவமவாகுபெயர் என்க. தூதுரைப்பார்க்குச் சொல்வன்மை இன்றியமையாத
தாகலின் ஒட்பமா யுரைக்க வல்லான் என்றார்.
 

( 39 )


     (பாடம்) 1. கட்பகர் துவலை. 2. தெளிகவேழ்நாள்கள் சென்றால்.